காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்துக்காக ஏறத்தாழ 1,600 குடும்பங்கள் பதிவு செய்துள்ளன.
தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இக்குடும்பங்களைச் சேர்ந்தோர் நடவடிக்கை எடுத்தால் காம்லிங்க் பிளஸ் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு நிதிச் சலுகைகளும் இதர ஆதரவுகளும் கிடைக்கும்.
உதாராணத்துக்கு, மத்திய சேமநிதிக் கணக்கிற்குப் பங்களிக்கும் நிலையான வேலையில் அவர்கள் இருந்தால் உதவி கிடைக்கும்.
காம்லிங்க் பிளஸ் தொகுப்புத் திட்டத்தின்கீழ் பலனடையும் குடும்பங்களுக்கு 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
“சுகாதார, சமூக ஆதரவை ஒன்றிணைக்கிறோம். வாழ்க்கையைச் சிறப்பான முறையில் வாழவும் திறம்பட பணிபுரியவும் இலட்சியங்களை எட்டவும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்,” என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா திங்கட்கிழமை (மார்ச் 10) கூறினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதுகுறித்து திரு சுவா பேசினார்.
நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மருத்துவர்களை நாடுவதில் சிரமத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவற்றுக்கு ஏற்புடைய சுகாதாரச் சேவைகளை அடையாளம் காண அவற்றுக்கு உதவி தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மோசமான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குறைந்த வருமான குடும்பங்களுக்குக் குடும்பப் பயிற்றுவிப்பாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உதவுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தந்த குடும்பங்களுக்கெனத் தனித் தனியான சுகாதாரத் திட்டங்கள் உருவாக்கிக் தரப்படும்.
உதாரணத்துக்கு, நாட்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதற்குச் சரியான வகையில் சிகிச்சை பெற சிரமப்படும்போது மருந்துகளை உட்கொள்ள அவருக்கு நினைவூட்டப்படும்.
வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க அவருக்கு அறிவுறுத்தப்படும்.
சொந்த வீடு வாங்க குடும்பங்களுக்கு உதவ சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு, குறைந்த வருமான குடும்பங்களில் முதலில் அதிகளவு மானியம் வழங்கப்படும் வீவக வாடகை வீடுகளில் வசிக்க ஏற்பாடு செய்யப்படும்.
பிறகு, அந்தக் குடும்பங்கள் விரும்பும் வீவக வீட்டை வாங்கத் தேவையான வருமானம், சேமிப்பு ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள வீவக அதிகாரிகள் உதவுவர்.
அதையடுத்து, அந்தக் குடும்பங்களின் இலக்கை அடைய குடும்பப் பயிற்றுவிப்பாளர் உதவுவார்.