குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில் ‘காம்லிங்க் பிளஸ்’ முன்னேற்றத் தொகுப்புத்திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.
குடும்ப வழிகாட்டியுடன் இணக்கமாகச் செயல்பட கடப்பாடு வைத்திருக்க உறுதிகொள்ளும் காம்லிங்க் பிளஸ் குடும்பங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை $500 வழங்கப்படும்.
நிலையான வேலைவாய்ப்பு, பாலர் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளின் சீரான வருகையைக் கடைப்பிடிக்கும் இலக்குகளில் உறுதியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் குடும்பங்களுக்கு வழங்குதொகை மேம்படுத்தப்படும்.
குறிப்பாக, பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் குறைந்தது 75 விழுக்காடு பள்ளி வருகை கொண்டிருந்தால் அக்குடும்பத்திற்கு காலாண்டுக்கு ஒருமுறை $100 ரொக்கம் வழங்கப்படுவதோடு, பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் $150 நிரப்பப்படும்.
குறைந்தபட்ச பள்ளி வருகை 50 விழுக்காடாக இருப்பின், அக்குடும்பத்திற்கு காலாண்டுக்கு ஒருமுறை $60 ரொக்கம் வழங்கப்படுவதோடு, பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் $90 நிரப்பப்படும்.
மாதம் குறைந்தது $2,000 மொத்த குடும்ப வருமானம் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் காலாண்டுக்கு ஒருமுறை $500 ரொக்கம் வழங்கப்படுவதோடு, அவர்களின் மத்திய சேம நிதி (மசேநிதி) கணக்கில் $750 சேர்க்கப்படும்.
மாதம் குறைந்தது $1,000 முதல் $2,000க்கு குறைவான மொத்த குடும்ப வருமானம் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் காலாண்டுக்கு ஒருமுறை $200 வழங்கப்படுவதோடு, அவர்களின் மசேநிதி கணக்கில் $300 சேர்க்கப்படும்.
இந்த மேம்பாடுகளுடன், காம்லிங்க் பிளஸ் திட்டத்திலிருக்கும், இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள், ரொக்கமாகவும் மசேநிதி வழங்குதொகையாகவும் ஓராண்டில் கிட்டதட்ட $10,200 வரை பெறக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
மேம்பாடுகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடப்புக்கு வரும்.
தமது மூன்று பேரப்பிள்ளைகளுக்கு சட்டபூர்வக் காப்பாளராக இருக்கும் திருவாட்டி நூர்ஜஹான் பீபி சின்னதம்பி, 61, காம்லிங்க் பிளஸ் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவியைப் பெரிதும் வரவேற்கிறார்.
நீரிழிவு நோய் காரணமாக அவரால் வேலைக்குப் போக முடியாத சூழல். வெறும் அரசாங்கத்தின் உதவியை மட்டும் சார்ந்து பேரப்பிள்ளைகளை அவர் கவனித்து வருகிறார்.
தனது மகளுடன் சேர்ந்து மொத்தம் ஐந்து பேர் கிச்சனர் சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
“ஓராண்டிற்கு கிட்டத்தட்ட $2,000 வரை உதவி இப்போது கிடைக்கிறது. பிரதமர் எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு செய்யும் உதவி பெரும் ஆதரவாக இருக்கும். பிள்ளைகளின் போக்குவரத்து செலவுகளுக்கு ஏதுவாக இருக்கும்” என்று தெரிவித்தார் திருவாட்டி நூர்ஜஹான்.

