சிங்கப்பூர் ஆயுதப் படைகள் தனது சிறந்த படைப்பிரிவுகளை அங்கீகரிப்பதற்காக 1969ஆம் ஆண்டில் ஒரு போட்டியை அறிமுகப்படுத்தியதிலிருந்து, ஒரு பட்டாளம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது. அதன் அண்மைய வெற்றியானது, 40வது முறையாக ‘சிறந்த போர்ப் படைப்பிரிவு’ என்ற பட்டத்தை அதற்குப் பெற்றுத் தந்துள்ளது.
தொடர்ந்து 23 ஆண்டுகளாக இந்த விருதை வென்றுள்ள முதலாவது மின்னற்படைப் பட்டாளம், ஜூலை 1ஆம் தேதியன்று சாஃப்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெறும் சிங்கப்பூர் ஆயுதப்படைகள் தின அணிவகுப்பில், அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் ஆகியோரிடமிருந்து விருதுகளைப் பெறும் 18 செயல்பாட்டுப் படைப்பிரிவுகள், 12 தேசிய சேவைப் படைப்பிரிவுகளில் ஒன்றாக இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28), தற்காப்பு அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்தப் படைப்பிரிவின் தளபதி மேஜர் மார்கஸ் சியோங், சிங்கப்பூரைப் பாதுகாக்கத் தங்களால் இயன்ற சிறந்த பங்களிப்பை வழங்கிய ‘ஒவ்வொரு படைவீரரின் அர்ப்பணிப்பையும்’ இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
“நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பின் பாரத்தை முதலாவது மின்னற்படைப் பட்டாளத்தின் வீரர்கள் உணர்ந்துள்ளனர். இந்தச் சாதனையையோ, சிங்கப்பூர் அனுபவிக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பையோ நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
தனித்துவமான சிவப்பு தலையணியை (பெரெ) அணியும் இந்த அதிரடிப் படைப் பிரிவு, வான்வழி நடவடிக்கைகள், உளவு மற்றும் திடீர்த் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகப் பயிற்சி பெற்றுள்ளது.
விருதுகளை வென்ற மற்ற செயல்பாட்டுப் பிரிவுகளில், சிறந்த கடல்சார் பாதுகாப்புப் பிரிவு எனப் பெயரிடப்பட்ட ஆர்எஸ்எஸ் பொங்கோல் மற்றும் சிறந்த போர் விமானப் படைப்பிரிவு எனப் பெயரிடப்பட்ட ‘145 ஸ்குவாட்ரன்’ ஆகியவை அடங்கும்.
கௌரவிக்கப்படவுள்ள தேசிய சேவைப் பிரிவுகளில், சிறந்த தேசிய சேவை சமிக்ஞைப் பிரிவு விருதை வென்ற ஒன்பதாவது சமிக்ஞைப் பட்டாளமும், சிறந்த தேசிய சேவை கவச வாகனப் பிரிவு எனப் பெயரிடப்பட்ட சிங்கப்பூர் கவசவாகனப் படைப்பிரிவின் 476வது பட்டாளமும் அடங்கும்.

