டிசம்பர் 4 முதல் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் 142 வங்கிக் கிளைகளுக்குச் சென்று லீ குவான் யூ நினைவு சிறப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விண்ணப்பிக்காதவர்களும் அதிகமான நாணயங்களைப் பெற விரும்புவோரும் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். 700,000க்கும் அதிகமான நாணயங்கள் இருப்பதாக ஆணையம் கூறியது.
தங்க நிறத்திலான $10 நாணயம் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் நூறாவது பிறந்தநாளை நினைவுகூர்கிறது.
நாணயத்தின் ஒருபக்கத்தில் அமரர் லீயின் முகத்தோற்றத்தோடு, மரினா அணைக்கட்டும் ராஃபில்ஸ் பிளேஸ் நிதி வட்டாரமும் இடம்பெற்றுள்ளன.
மறுபக்கத்தில் ‘கோட் ஆஃப் ஆர்ம்ஸ்’ மரபுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒருகோணத்தில் இருந்து பார்த்தால் ‘1923’ என்றும் இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால் ‘2023’ என்றும் தெரியும்.
முன்னதாக மொத்தம் 4 மில்லியன் லீ குவான் யூ சிறப்பு நாணயங்களைத் தயாரித்ததாக ஆணையம் கூறியது. அவற்றுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்தவர்களே செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நாணயங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து வங்கிகளிலிருந்து நாணயங்களைப் பெற்றுக்கொள்ள, பொதுமக்கள் தங்கள் அடையாள அட்டை, கடப்பிதழ் அல்லது வேலை அட்டையைக் கொண்டுசெல்ல வேண்டும்.
இதற்கு முன்னர் நாணயங்களுக்கு விண்ணப்பம் செய்து, ஆனால் அவற்றை இன்னும் பெற்றுக்கொள்ளாதவர்கள் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணையம் நினைவூட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களை https://go.gov.sg/lky100coin எனும் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.