தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செப்டம்பர் 4 முதல் லீ குவான் இயூ சிறப்பு நாணயங்களைப் பெறலாம்

1 mins read
738a93ed-832b-411c-824b-a10050fc9520
அமரர் லீ குவான் இயூவின் 100ஆவது பிறந்தநாள் நினைவுச் சிறப்பு நாணயம்.  - படம்: சிங்கப்பூர் நாணய ஆணையம்

லீ குவான் இயூ சிறப்பு நாணயங்களுக்கு கடந்த மே மாதம் வெற்றிகரமாக விண்ணப்பித்தோர் அவற்றை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தப் பத்து வெள்ளி நாணயம் சிங்கப்பூரின் மறைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படுகிறது.

மொத்தம் நான்கு மில்லியன் நாணயங்களைத் தயாரித்திருப்பதாக ஆணையம் அறிவித்தது. 3.3 மில்லியன் நாணயங்களுக்கு 700,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அது தெரிவித்தது.

எஞ்சிய நாணயங்கள், பெற்றுக்கொள்ளப்படாதவை உள்பட, குறிப்பிட்ட வங்கிகளில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறும். சிங்கப்பூரர்கள் அல்லாதவர்களும் அவற்றைப் பெறலாம்.

ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதிவரை, வெற்றிகரமாக விண்ணப்பித்த ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஆணையத்திடமிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அந்தக் குறுஞ்செய்தியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாணயங்களின் எண்ணிக்கை, நாணயங்களைப் பெற்றுக்கொள்வதற்கு செப்டம்பர் 4க்கும் நவம்பர் 26க்கும் இடைப்பட்ட இரண்டு வாரக் காலகட்டம், நாணயங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வங்கி போன்றவை இடம்பெற்றிருக்கும்.

சில விண்ணப்பதாரர்களுக்கு நாணயங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் தேர்ந்தெடுத்த வங்கி அல்லாமல் மற்றொரு வங்கி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சில வங்கிகளில் அதிக தேவை இருக்கலாம் என்பதே அதற்குக் காரணம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

இரண்டு வாரக் காலகட்டத்திற்குள் நாணயங்களைப் பெறமுடியாதவர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வங்கியில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்