நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கருத்து; ஏமஸ் யீ மீது குற்றஞ்சாட்டப்படும்

நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கருத்து; ஏமஸ் யீ மீது குற்றஞ்சாட்டப்படும்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Aug 2026 - 7:33 pm

1 mins read

இன, சமய நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டதற்காகச் சிறார் பாலியல் குற்றவாளியான ஏமஸ் யீ மீது புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது.

சிங்கப்பூரில் மலாய்/முஸ்லிம் சமூகத்தினரையும் இந்தியச் சமூகத்தினரையும் பெரும்பான்மையாக உள்ள சீனர்கள் பாகுபாட்டுடன் நடத்துவதாக ஏப்ரலில் இரு வலைப்பதிவுகளையும் மே மாதம் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றையும் யீ, 27, வெளியிட்டிருந்தார்.

மலாய், இந்தியச் சமூகங்களை அரசாங்கம் நடத்தும் விதம் குறித்து அவர் கருத்து கூறியிருந்தார். அரசாங்கத்திற்கு எதிராக அச்சமூகங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அவர் தூண்டியிருந்தார்.

பாலியல் நடவடிக்கைகளுக்குச் சிறார் சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை நீக்க வேண்டும் என்றும் சிறார் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கத்திற்குத் தடை விதிக்கும் சட்டங்களை நீக்க வேண்டும் என்றும் கூறி யீ காணொளி வெளியிட்டிருந்தார்.

தேசிய சேவையில் சேரத் தவறியதற்காகவும் செல்லுபடியாகும் அனுமதியின்றி வெளிநாட்டில் தங்கியிருந்ததற்காகவும் அவருக்கு ஏற்கெனவே பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவுத் தலைமையகத்தில் புதிய குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதும், அவரின் தாயார் அவருக்காக மீண்டும் பிணைத்தொகை செலுத்தினார்.

குறிப்புச் சொற்கள்