சுகாதாரப் பொருள்கள், மருந்துகள் என பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான சட்ட வரையறைகளை சுகாதார அறிவியல் ஆணையம் 2028ஆம் ஆண்டுக்குள் மறு ஆய்வு செய்து அமலாக்கத் திட்டமிடுகிறது.
இதன் விவரங்களை ‘பாரம்பரிய சுகாதார மருந்துகள் வழி நீண்ட ஆயுள்’ என்ற மாநாட்டில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) கலந்துகொண்டு ஆற்றிய சிறப்புரையில் சிங்கப்பூர் சுகாதார ஆணையத்தின் தலைவர் ரேமன் சுவா தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், நீண்ட வாழ்நாளுக்கென தயாரிக்கப்படும் மருந்துப்பொருள்களின் மேம்பாட்டை ஆதரிக்கவும் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உதாரணமாக ஆரோக்கியத்தை மேற்கோள்காட்டி விற்பனை செய்யப்படும் ஊக்க மருந்துகள் நோய்களை தீர்க்கும் என்று அறிவிக்கமுடியாது. 2028ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் வடிவமைக்கப்படும்.
நீண்ட ஆயுளுக்கென சந்தையில் கிடைக்கும் பொருள்கள் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக தயாரிக்கப்படுவதில்லை. எனவே நோயாளிகளுக்கு உண்மையான பலன்களைத் தரும் விதத்தில் அறிவியல் சார்ந்த ஒருங்கிணைந்த ஏற்பாடுகளை வழங்க ஆணையம் பல அமைப்புகளுடன் ஆய்வுகள் நடத்தவுள்ளது.

