தெம்பனிஸ் வெஸ்ட்டில் பூனை ஒன்று மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பூனை, குப்பைத் தொட்டிக்கு அருகே வைக்கப்பட்டிருந்தது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 81இல் உள்ள புளோக் 897இன் கீழ்த்தளத்தில் மே 24ஆம் தேதி காலை 7 மணியளவில் சன்ஷைன் என்ற அப்பூனையை மாண்ட நிலையில் குடியிருப்பாளர் ஒருவர் கண்டெடுத்தார்.
பிளாஸ்டிக் பையில் வைக்கப்படிருந்த பூனை, துண்டுப் பிரசுரங்களில் சுற்றப்பட்டிருந்தது. பூனையின் கையிலும் துண்டுப் பிரசுரங்களிலும் ரத்தக்கறை படிந்திருந்தது. பையில் ஒரு வெள்ளை நிற ரப்பர் கையுறையும் காணப்பட்டது.
பூனையைக் கண்டெடுத்த குடியிருப்பாளர் ஒருவர் அதை விலங்குநல மருத்துவரிடம் கொண்டுசென்றார். பூனையின் முகத்திலும் தலையிலும் பலத்த அடிபட்டதன் விளைவாக உள்ளுக்குள் ரத்தம் கசிந்து அது இறந்ததாகக் கூறப்பட்டது.
பூனையின் உடலில் உள்ள வேறு பகுதிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. அதன் கீழ்தாடை மட்டும் விலகியிருந்தது.
பூனைமீது வாகனம் மோதியிருக்கலாம், யாராவது பலமாக அடித்திருக்கலாம் அல்லது உயரத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று விலங்குநல மருத்துவர் கூறியதைக் குடியிருப்பாளர் பகிர்ந்துகொண்டார்.
பூனையைப் பராமரித்தோர் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வட்டாரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களைப் பார்க்கும்படி கேட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சன்ஷைன் பூனை கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சமூகப் பூனையாக இருந்து, வட்டாரத்தில் உள்ளோரை மகிழ்வித்தது என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.