குடும்பப் பிணைப்பை வலியுறுத்திய சமூகக் கொண்டாட்டம்

2 mins read
504eac89-6be5-4d3d-a736-787ed8d6d536
மகள் ஜோவெனாவுடன் மகேஸ்வரி - ஆல்ஃபிரெட் இணையர். - படம்: அனுஷா செல்வமணி

கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் கலந்துகொண்ட ‘பி ஏ ஃபேமிலி பிளேகிரவுண்ட்’ எனும் கொண்டாட்டம் பல்வேறு குடும்பங்களுக்கு ஓர் அர்த்தமுள்ள பிணைப்பை ஏற்படுத்தும் அனுபவத்தை அண்மையில் அள்ளித்தந்தது.

மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு புதிதாகத் திறக்கப்படவிருக்கும் பிரேடல் ஹைட்ஸ் சமூக மன்றத்தில் தேசிய குடும்ப விழாவை முன்னிட்டு இந்தக் கொண்டாட்டம் களைகட்டியது.

மக்கள் கழகம் நடத்திய இந்தக் கொண்டாட்டத்தில் குடும்பங்களை மகிழ்விக்கும் பலவிதமான நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பிரேடல் ஹைட்ஸ் சமூக மன்றத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) காலையிலிருந்து மாலைவரை பல குடும்பங்கள் சமூக ஒற்றுமையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் பங்குகொண்டு திளைத்தன.

ஜூன் 15ஆம் தேதி தந்தையர் தினம் என்பதால் தந்தையரும் பிள்ளைகளும் ஒன்றிணைந்து விளையாட்டுகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, குடும்பங்களின் காற்பந்துத் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்தன.

நாடாளுமன்ற நாயகரும் மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகருமான திரு சியா கியன் பெங், மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் அடித்தள அமைப்புகளுக்கான மற்றோர் ஆலோசகர் டயானா பாங், மவுண்ட்பேட்டன் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் கோ ஸி கீ ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் டயானா பாங், மவுண்ட்பேட்டன் அடித்தள அமைப்புக்கான ஆலோசகர் கோ ஸி கீ ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங், மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் அடித்தள அமைப்புகளுக்கான ஆலோசகர் டயானா பாங், மவுண்ட்பேட்டன் அடித்தள அமைப்புக்கான ஆலோசகர் கோ ஸி கீ ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். - படம்: மக்கள் கழகம்

“வார இறுதியாக இருந்தாலும் பல குடும்பங்கள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதைக் காணும்போது மனத்திற்கு இதமாக உள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மிக முக்கியம் என்பதை நான் எப்போதும் வலியுறுத்துவேன். வலுவான குடும்பப் பிணைப்புதான் நாளை வலுவான சிங்கப்பூரை அமைக்கும்,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் திரு சியா.

நடனம், மாயவித்தை எனப் பலவகையான கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.

நடன நிகழ்ச்சி, மாயாஜால நிகழ்ச்சி என பல வகையான கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.
நடன நிகழ்ச்சி, மாயாஜால நிகழ்ச்சி என பல வகையான கொண்டாட்டங்களில் பிள்ளைகள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர். - படம்: அனுஷா செல்வமணி

இதுபோன்ற பல்வேறு சமூக குடும்பக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் திரு மகேஸ்வரி - ஆல்ஃபிரெட் தம்பதி, தங்கள் ஐந்தரை வயது மகளையும் அழைத்து வந்திருந்தனர்.

மெக்பர்சனில் வசிக்கும் அவர்கள், பள்ளி மூலமாகத் தங்கள் மகள் கொண்டாட்டத்தில் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஆடியதைக் கண்டு மகிழ்ந்தனர்.

“இந்தக் கொண்டாட்டத்தில் எங்களைப் போன்ற பெற்றோரைக் காணவும் அவர்களுடன் பழகவும் முடிகிறது,” என்றார் திரு மகேஸ்வரி.

குறிப்புச் சொற்கள்