$80 மில்லியனுக்கும் அதிக நிதி வழங்கிய சமூக உண்டியல் அமைப்பு

$80 மில்லியனுக்கும் அதிக நிதி வழங்கிய சமூக உண்டியல் அமைப்பு

1 of 3
படம்: பே.கார்த்திகேயன்
படம்: பே.கார்த்திகேயன்
படம்: பே.கார்த்திகேயன்

05 Oct 2026 - 9:44 pm

2 mins read

தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் சமூக உண்டியல் 2025ல் $80 மில்லியனுக்கும் அதிகமான தொகையை 340 சமூகச் சேவைத் திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் வழங்கியுள்ளது.

அதன்வழி 130,000க்கும் அதிகமான தனிநபர்களும் குடும்பங்களும் பயனடைந்தனர். இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஆதரவுபெற்ற பயனாளர்களின் எண்ணிக்கையைவிட ஏறத்தாழ 45 விழுக்காடு அதிகமாகும்.

கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரன்ட் ஹோட்டலில் திங்கட்கிழமை (அக்டோபர் 5) நடந்த சமூக உண்டியல் விருது நிகழ்ச்சியில் நிதி, அனுபவம், தொண்டூழியம் ஆகியவற்றை வழங்கிய 190 சமூகப் பங்காளிகளுக்கு மொத்தம் 271 விருதுகள் வழங்கப்பட்டன.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை விருது வென்ற பங்காளிகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகம்.

நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் சமுதாய, குடும்ப மேம்பாட்டு, உள்துறை மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

புரோப்நெக்ஸ் நிறுவனம், இவ்வாண்டு அறக்கொடை பிளாட்டின விருதையும் (Charity Platinum Award) தொண்டூழியப் பங்காளி விருதையும் (Volunteer Partner Award) வென்றுள்ளது. அந்நிறுவனம் இவ்விரு விருதுகளைச் சென்ற ஆண்டும் வென்றது.

அறக்கொடை பிளாட்டின விருது $300,000க்கும் அதிகமான நன்கொடை வழங்கும் நிறுவனங்களுக்கும் தொண்டூழியப் பங்காளி விருது சமூகச் சேவை அமைப்புகளுடன் தொடர்ச்சியான தொண்டூழிய முயற்சிகளில் ஈடுபடும் நிறுவங்களுக்கும் வழங்கப்படுகிறது.

“மனமார ஆற்றும் சேவைக்கு இவ்விருதுகள் கிடைத்திருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் ஊழியர்களிடையே தொடர்ந்து சேவை மனப்பான்மையை விதைக்க முற்படுகிறோம்.

“இனி வரும் ஆண்டுகளிலும் சமூகச் சேவையில் ஈடுபட்டு உச்ச விருதைப் (Pinnacle Award) பெற முயற்சி செய்வோம்,” என்றார் புரோப்நெக்ஸ் நிறுவனத் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர்.

முழுமையான பங்களிப்பை அங்கீகரிக்கும் சமூக உண்டியலின் ஆக உயரிய விருதான உச்ச விருதை இவ்வாண்டு டிபிஎஸ் வங்கி, இன்கம் காப்புறுதி நிறுவனம், சிங்டெல், எஸ்பி குழுமம், யுஒபி வங்கி ஆகிய ஐந்து நிறுவனங்கள் வென்றன.

கடந்த பத்து ஆண்டுகளில், சமூகச் சேவைத் துறைக்கு ஆதரவளிக்க சமூக உண்டியல் $500 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளது.

“ஒவ்வொரு பங்களிப்பும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நன்கொடைகள், தன்னார்வத் தொண்டிலிருந்து நிபுணத்துவத்தைப் பகிர்தல், அனைவரையும் உள்ளடக்கிய முறையில் பணியமர்த்துதல், சமூக நலன்களை மேம்படுத்தும் தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துதல் வரை, ஒவ்வொரு முயற்சியும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமான ஆதரவை வலுப்படுத்த உதவுகிறது.

“மேலும், பல பங்காளிகள் நீண்டகால நன்கொடை அளிப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கி, ஊழியர்கள் பங்களிப்பதற்கு அர்த்தமுள்ள வழிகளை உருவாக்கும்போது, சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் பயனுள்ள சமூகச் சேவைத் துறையை உருவாக்கவும் எங்களால் வலுவான ஆதரவை வழங்க முடியும்,” என்று சமூக உண்டியலின் தலைவர் டேனி கோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்