‘ஹார்ட்ஸ் அன் வீல்ஸ் 2026’ எனும் வருடாந்தர உணவுக் கொடை திரட்டும் நிகழ்ச்சியில், 33,400 உணவுப் பொருள்களும் $55,000க்கும் அதிகமான நிதி நன்கொடைகளும் வழங்கப்பட்டன.
‘வெர்ன்ஸ்’ வாகனத் தொழில்துறை நிறுவனத்துடன் (Wearnes Automotive) இணைந்து ‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ அமைப்பு ஏற்பாடு செய்த அந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில், மோட்டார் வாகனச் சமூகத்தினர், நிறுவனப் பங்காளிகள், பொதுமக்கள் ஆகியோர் கூடியிருந்தனர்.
லெங் கீ ரோட்டில் கடந்த 7ஆம், 8ஆம் தேதிகளில் நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்கு, ஏறக்குறைய 250 வாகனங்களில் திரண்டு வந்திருந்த 13 கார், மோட்டார்சைக்கிள் மன்றங்களின் பிரதிநிதிகளுடன், நிறுவனக் குழுவினர், பொது நன்கொடையாளிகள் ஆகியோர் அந்த உணவுப் பொருள்களையும் நன்கொடைகளையும் வழங்கினர்.
அந்த நன்கொடைகள் ‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ அமைப்பின் ஐந்து உணவு விநியோகத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும்.
அந்தத் திட்டங்கள், சிங்கப்பூரில் தேவையுடைய குடும்பங்கள், மூத்தோர், மாணவர்கள் ஆகியோருக்கு உணவு ஆதரவுச் செயல்பாடுகள் நீடித்து நிலைத்திருப்பதற்கு உதவுகின்றன.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி (குவீன்ஸ்டவுன்) நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான எரிக் சுவா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் புக்கிட் மேரா உயர்நிலைப் பள்ளியையும் குவீன்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியையும் சேர்ந்த 40 மாணவர்களுடனும் குவீன்ஸ்டவுன் அடித்தள அமைப்பின் தொண்டூழியர்களுடனும் அவ்விடத்தைச் சென்றடைந்தார்.
அந்த இடத்திற்கு ஏறக்குறைய 100 மோட்டார்சைக்கிள்கள் விரைவில் வந்திறங்கியதில் அங்கு மேலும் உற்சாகம் பரவியது.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, ‘ஹார்ட்ஸ் அன் வீல்ஸ்’ உணவுக் கொடை திரட்டும் நிகழ்ச்சி, 165,000க்கும் அதிகமான உணவுப் பொருள்களையும் $235,000க்கும் அதிகமான நிதி நன்கொடைகளையும் திரட்டியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2025ஆம் ஆண்டு மட்டுமே, 33,000க்கும் அதிகமான உணவுப் பொருள்களும் கிட்டத்தட்ட $50,000க்கும் அதிகமான ரொக்க நன்கொடைகளும் திரட்டப்பட்டன.
‘ஃபூட் ஃப்ரம் த ஹார்ட்’ அமைப்பு தொடர்ந்து அதன் உணவு ஆதரவு முயற்சிகளை விரிவாக்கிவரும் நிலையில், ‘ஹார்ட் அன் வீல்ஸ்’ நிகழ்ச்சி, சமூகம் வழிநடத்தும் இயக்கமாக வளர்ந்துவருகிறது.
ஆரோக்கியமான உணவுகளைப் பெறமுடியாத நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க, நிறுவனப் பங்காளிகள், மோட்டார் வாகன ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதன்மூலம், சிங்கப்பூரில் அதிகரிக்கும் சமூக உணர்வை அந்நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது.

