சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு ஜூன் 11லிருந்து $500 'சிடிசி’ பற்றுச்சீட்டுகள்

சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு ஜூன் 11லிருந்து $500 'சிடிசி’ பற்றுச்சீட்டுகள்

2 mins read
தேவைப்பட்டால் கூடுதல் உதவி வழங்க அரசாங்கம் தயார்: துணைப் பிரதமர் கான்
939447e4-48d8-49b1-9713-d321011e07a2
‘சிடிசி’ பற்றுச்சீட்டு விநியோகம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் (இடமிருந்து) வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாம் ஸிமிங், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா லே பெங், துணைப் பிரதமர் கான் கிம் யோங், தென்மேற்கு வட்டார மேயர் லோ யென், தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட ஆலோசகர் டேவிட் என்கோ தை வீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1.38 மில்லியன் குடும்பங்கள், வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் $500 மதிப்பிலான சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெறவிருக்கின்றன. 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றத்தால் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, சிங்கப்பூரர்களுக்கு உதவ 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படவிருந்த பற்றுச்சீட்டுகளை இந்த ஆண்டே வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது.

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள நன்யாங் சமூக மன்றத்தில் பற்றுச்சீட்டு விநியோகம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சிங்கப்பூர்க் குடும்பங்களுடன் குடியிருப்பு வட்டார வணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள் ஆகியோருக்கும் பற்றுச்சீட்டுகள் ஆதரவாக இருக்கும் என்று திரு கான் கூறினார். 

“மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றத்தால் சிங்கப்பூர் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. சிங்கப்பூரின் பணவீக்கமும் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் குறைவாகப் பதிவாகியிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 1.7 விழுக்காடாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.4 விழுக்காடானது,” என்றார் அவர்.

அரசாங்கம் நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் தேவை ஏற்பட்டால் கூடுதல் உதவிகளை வழங்க அது தயாராக இருக்கிறது என்றும் திரு கான் உறுதியளித்தார்.

‘சிடிசி’ பற்றுச்சீட்டுத் திட்டத்தின் மூலம் 24,000க்கும் மேற்பட்ட வணிகர்களும் உணவங்காடிக் கடைக்காரர்களும் கிட்டத்தட்ட 400 பேரங்காடிகளும் பயனடையவிருக்கின்றன.

“முதியோருக்கான அணையாடைகளின் (diapers) விலை அதிகமாகிவிட்டது. அவற்றை வாங்குவதற்கு இந்தப் பற்றுச்சீட்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன,” என்றார் 66 வயது ராஜேஸ்வரி துரைமுருகையா.

“2020ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட பற்றுச்சீட்டுகளால் எனது வணிகம் வளர்ச்சி கண்டுள்ளது. அரசாங்கம் தரும் இந்த உதவி மூலம் என்னால் சமூகத்திற்குத் திரும்பக் கொடுக்க முடிகிறது,” என்று ‘அம்மன் ஹவுஸ்ஹோல்ட் சப்ளைஸ்’ நிறுவன உரிமையாளர் சின்னத்தம்பி முனியாண்டி குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்மேற்கு வட்டார மேயரும், மேயர்கள் குழுத் தலைவருமான லோ யென், இவ்வாண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளைக் கிட்டத்தட்ட 94.5 விழுக்காட்டினர் பெற்றுக்கொண்டதாகக் கூறினார்

ஒன்பதாவது முறையாகத் தற்போது ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்