தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவில் மேலும் சிறந்த சேவைகளை வழங்கவிருக்கும் சமூக சுகாதார நிலையங்கள்

2 mins read
f39235d1-fe0c-4fb7-9782-46b5d963ab17
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (இடமிருந்து இரண்டாவது) கம்போங் அட்மிரால்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற சுகாதார நிகழ்ச்சியின் அங்கமொன்றில் பங்கெடுத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக சுகாதார நிலையங்கள் அடுத்த ஆண்டிலிருந்து (2026) மேலும் சிறந்த சேவைகளை வழங்கவிருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்திருக்கிறார். தொடக்கமாக, சிங்கப்பூரின் வட பகுதியில் உள்ள அத்தகைய நிலையங்களில் மேம்பட்ட சேவைகளை எதிர்பார்க்கலாம். அங்கு நாட்பட்ட நோயால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகம்.

செம்பவாங், உட்லண்ட்ஸ், யீசூன் ஆகிய வட்டாரங்களில் அடுத்த ஆண்டு மேலும் ஐந்து சமூக சுகாதார நிலையங்கள் திறக்கப்படும் என்றும் திரு ஓங் சொன்னார். அவற்றையும் சேர்த்து வட பகுதியில் என்எச்ஜி ஹெல்த்தின் (NHG Health) கீழ்வரும் அதுபோன்ற நிலையங்களின் எண்ணிக்கை 34லிருந்து 39க்குக் கூடும்.

நிலையங்கள் வாரத்திற்கு ஒரு முறை சேவையாற்றும். குடியிருப்பாளர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை மேலும் சிறந்த முறையில் பார்த்துக்கொள்ளவும் நோய்கள் வருவதைத் தவிர்க்கவும் உதவுவது அதன் நோக்கம். ஒருவரின் உடல்வலுவைச் சரிபார்க்கும் பரிசோதனை, தொலை சுகாதார ஆலோசனை முதலிய கூடுதல் சேவைகளை நிலையங்கள் வழங்கும்.

தற்போது என்எச்ஜி ஹெல்த்தின்கீழ் செயல்படும் சமூக சுகாதார நிலையங்களில் பெரும்பாலானவற்றுக்குச் செல்ல முன்பதிவு அவசியம். நிலையங்களில் சில, வாரத்திற்கு ஒரு முறையும் மற்றவை, மாதம் இரு முறை அல்லது ஒரு முறையும் இயங்குகின்றன.

அனைத்து நிலையங்களும் வாரத்திற்கு ஒரு முறை செயல்பட வேண்டும் என்பதும் நோயாளிகள் முன்பதிவின்றி நேரடியாகச் சென்று சேவைகளைப் பெறமுடிய வேண்டும் என்பதும் திட்டம் என்றார் திரு ஓங். கம்போங் அட்மிரால்டியில் நடைபெற்ற வருடாந்தர சுகாதார நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

சமூக சுகாதார நிலையம் என்பது குடியிருப்பாளர்கள் நேரடியாகச் சென்று அவர்களின் மருந்துமாத்திரைகளைக் கேட்கும் இடமாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் ஓங் கூறினார். அத்துடன் அடுத்த தடுப்பூசியை எப்போது போட்டுக்கொள்வது அல்லது சுகாதாரப் பரிசோதனைக்கு எப்போது செல்வது போன்ற விவரங்கள் அவர்களுக்கு அங்குக் கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக சுகாதார நிலையங்கள், தொலை சுகாதாரச் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார அமைச்சு அதற்கு ஆவன செய்யும். ஆலோசனை தேவைப்படும்போது நோயாளிகள் மருத்துவரை நாடுவதற்கு அது உதவியாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்