சிங்கப்பூரில் திடீரென ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் மக்கள் எந்தளவு விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய உள்துறை அமைச்சு சமூக அளவில் பாவனைப் பயிற்சிகளை நடத்தவிருக்கிறது.
ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து இறுதிவரை மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அந்தப் பயிற்சிகள் இடம்பெறும்.
உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தல்களை அவை பிரதிபலிக்கும் என்று உள்துறை அமைச்சு வியாழக்கிழமை (மே 29) தெரிவித்தது. பாதுகாப்பான முறையிலும் மக்களுக்குப் பெரிய அளவில் இடையூறு ஏற்படாத வகையிலும் பயிற்சிகளை அதிகாரிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பொது இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காணும் மக்கள் என்ன செய்தார்கள், எப்படி அவற்றைக் கையாண்டார்கள் போன்றவை கேமராக்களில் பதிவுசெய்யப்படும். உள்துறை அமைச்சு அதிகாரிகள் பொதுமக்கள் சிலரிடமும் கேள்விகள் கேட்டு பேட்டி எடுப்பர்.
அவர்கள் உரிய அனுமதியுடன் விழிப்புணர்வை அதிகரிக்க கேமராக்களில் பதிவுசெய்யப்படும் காட்சிகள் பின்னர் தொகுக்கப்பட்டு காணொளித் தொடர்களாக உள்துறை அமைச்சின் சமூக இணையத்தளங்களில் வெளியிடப்படும். முதல் தொகுப்பு ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படும் என்றது உள்துறை அமைச்சு.
2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட எஸ்ஜி பாதுகாப்பு கருத்துக் கணிப்பில் 74 விழுக்காட்டினர் பொதுவாக விழிப்புடன் இருப்பதாகவும் பொது இடங்களில் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொள்வோரையும் பொருள்களையும் கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தவிர்ப்பதிலும் தடுப்பதிலும் தாங்களும் பங்கு வகிப்பதாக 97 விழுக்காட்டினர் கூறினர்.
பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
காஸா போர் தொடங்கியதிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இங்கு அதிகரித்துள்ளதை உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவின் 2024ஆம் ஆண்டின் வருடாந்திர அறிக்கை சுட்டியது.
2023ஆம் ஆண்டு அனைத்துலகக் கல்விகளுக்கான எஸ் ராஜரத்னம் கல்விக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூரில் தனிநபர்களால்தான் பெரும்பாலான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் 17 வயது இளையர் தெம்பனிசில் முஸ்லிம் அல்லாதோரைக் கத்தியால் தாக்க முற்பட்டதை அடுத்து கைதுசெய்யப்பட்டார்.