பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமூகம் மேலும் சிறப்பாக எதிர்கொள்ள, 2024 நிதியாண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரில் சமூக வட்டமேசைக் கலந்துரையாடல்களின் எண்ணிக்கையை 36லிருந்து 40ஆக உயர்த்தவிருப்பதாக உள்துறை அமைச்சும் மக்கள் கழகமும் தெரிவித்துள்ளன.
“2019 முதல், சமூக வட்டமேசைக் கலந்துரையாடல்களின்வழி நாங்கள் சமூகத்தில் முக்கியப் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, அவசரநிலை ஏற்படும்போது முக்கியத் தகவல்களைப் பகிரும் தகவல் தொடர்புகளை உருவாக்குகிறோம்,” என்று உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் சனிக்கிழமை (அக்டோபர் 19) தெம்பனிஸ் சங்காட் சமூக மன்றத்தில் நடைபெற்ற சமூக வட்டமேசைக் கலந்துரையாடலில் கூறினார்.
கல்வி நிறுவனங்கள், வணிகங்கள், அடித்தள அமைப்புகள், சமூக மற்றும் சமய அமைப்புகளைச் சேர்ந்த 101 சமூக வட்டமேசைக் கலந்துரையாடல் உறுப்பினர்கள், தெம்பனிஸ் வட்டமேசையின் இரண்டாம் பதிப்பில் கலந்துகொண்டு அவசரகாலத் திட்டங்களை மதிப்பாய்வு செய்தனர்.
இந்தக் கலந்துரையாடல் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று எனக் கூறிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட 17 வயது சிங்கப்பூர் இளையர் ஒருவர் செப்டம்பரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் கூறியதற்கு அடுத்த நாள் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதைச் சுட்டினார்.
அச்செய்தி குறித்து அறிந்ததும், வட்டமேசைக் கலந்துரையாடல் பங்கேற்பாளர்கள் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய உந்துதலாக இருந்தது என்று திரு மசகோஸ் சொன்னார்.
பயங்கரவாதத் தாக்குதல்களால் சமூகத்தில் ஏற்படும் பிளவுகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் தாக்குதலுக்குப் பிறகு அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும் மற்ற பங்குதாரர்களுடன் கலந்துரையாட இதுபோன்ற முயற்சிகள் வாய்ப்பு அளிப்பதாகச் சொன்னார் பங்கேற்பாளர்களில் ஒருவரான தெம்பனிஸ் சங்காட் மண்டலம் 3 குடியிருப்போர் குழுவின் துணைத்தலைவர் சுப்ரமணியன் கல்யாண்குமார், 42.
“அவசரகாலத்தின்போது அதுகுறித்த தகவல்களை மக்களிடம் எப்படிச் சேர்க்க வேண்டும், ‘எஸ்ஜி செக்யோர்’ செயலியின் முக்கியத்துவம், பொய்ச் செய்திகளின் பாதிப்பு, வெவ்வேறு பங்குதாரர்கள் இணைந்து எப்படிச் செயல்படலாம் போன்ற விவகாரங்களை ஒன்றுகூடி கலந்துரையாடினோம்,” என்றார் அவர்.

