நாட்டின் பாதுகாப்பைக் கட்டிக்காக்க சமுதாயத்தின் பங்களிப்பு அவசியம்: சண்முகம்

நாட்டின் பாதுகாப்பைக் கட்டிக்காக்க சமுதாயத்தின் பங்களிப்பு அவசியம்: சண்முகம்

2 mins read
c155a8ee-fce5-43a2-b18e-b202237c92fa
உள்துறைக் குழு தேசிய தின பற்றுறுதிச் சடங்கில் மூத்த அமைச்சர் கா. சண்முகம் உரையாற்றுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அண்மைக் காலத்தில் அரங்கேறிய பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள உள்துறைக் குழு எடுத்த நடவடிக்கைகளை உள்துறைக் குழு தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் மூத்த அமைச்சர் கா.சண்முகம் எடுத்துரைத்தார்.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், தீவிரவாதச் சித்தாந்தம் கொண்ட இளையர்கள் சிலர் தடுத்துவைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எவ்வாறு சட்டங்களை வலுப்படுத்துவது, சமூக அமைப்புகளுடன் இணைந்து உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பன்முனை உத்திகளைக் உள்துறை அமைச்சு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் புதன்கிழமை (ஜூலை 29) கூறினார்.

அதேவேளையில், உள்துறைக் குழுவின் முயற்சிகள் மட்டும் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமானவையல்ல என்றார் அவர்.

பாதுகாப்பு குறித்து மக்களின் விழிப்புணர்வை அறிய உள்துறை அமைச்சு அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் வெறும் 17 விழுக்காட்டினர் ஆபத்தைக் கண்டறிந்தனர். அவர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

ஆய்வின் முடிவுகள் குறித்து கவலை தெரிவித்த திரு சண்முகம், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் சமுதாயம் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தாக்குதல்கள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை நினைவூட்டிய அவர், 2001ஆம் ஆண்டின் 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து, சில நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்கப்படுகின்றனர் என்றார்.

முழுச் சமூகத்தையும் ஒதுக்கிவைப்பது தீர்வாகாது

தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள் மிகச் சிறிய சிறுபான்மையினர் என்பதால், ஒரு சிலரின் செயல்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒதுக்கி வைப்பதோ சந்தேகப்படுவதோ சரியான அணுகுமுறையாகாது என்றே சிங்கப்பூர் நம்புவதாக அமைச்சர் விளக்கினார்.

அதோடு, முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் சட்டத்தை மதிக்கும் சிங்கப்பூரர்கள் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

“இந்தச் சிறிய நாட்டில், நாம் சிறிய படகு ஒன்றில் சேர்ந்து பயணிக்கவேண்டும். இல்லையெனில் நாம் அனைவருக்குமே ஆபத்து,” என்று நாட்டின் ஒற்றுமையின் இன்றியமையாமையை உணர்த்தினார் அவர்.

தேசிய தின விருதுகளும் சாதனையாளர்களின் கதைகளும்

உள்துறைக் குழு தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் பங்கேற்றோர்.
உள்துறைக் குழு தேசிய தினப் பற்றுறுதிச் சடங்கில் பங்கேற்றோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

திரு சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பற்றுறுதிச் சடங்கில், சிங்கப்பூரின் பாதுகாப்பிற்காக முக்கியப் பங்காற்றிய 103 உள்துறைக் குழு அதிகாரிகள், மூன்று குழுத் திட்டங்கள், ஒன்பது அமைப்புகள், 17 உள்துறைக் குழுத் தொண்டர்கள், பொதுமக்களில் 23 பேர் ஆகியோருக்கு உள்துறை தேசிய தின விருதுகள் வழங்கப்பட்டன.

அவர்களில் 52 வயது சரவணகுமார் குமாரசாமியும் ஒருவர்.

உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பில் (எச்டிஎக்ஸ்) பணியாற்றும் அவர், இத்துறையில் தனது பயணத்தைக் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

“சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதும் சவாலான விஷயங்களில் ஈடுபடுவதும் எனக்கு எப்போதுமே பிடிக்கும். இது எனக்கு இயல்பாகவே அமைந்த ஒரு பாதையாகும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
தேசியக் கொடிஅமைச்சர்சமூகம்பாதுகாப்புஉள்துறைக் குழுஉள்துறை அமைச்சு