தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிறுவனங்கள் தனியார் வாடகைக் கார்களை பதிவு செய்த 3 ஆண்டுகளுக்குள் விற்கத் தடை

2 mins read
34b6fa85-c954-4ce2-b415-d82b4edb9780
தனியார் வாடகை பயணச் சேவை போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்ய எல்டிஏ நடவடிக்கை எடுக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனங்கள் தங்களது தனியார் வாடகைக் கார்களை பதிவு செய்த மூன்று ஆண்டுகளுக்குள் விற்க முடியாது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை தனிப்பட்டவர்களுக்கு மாற்றலாம் என்று பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

வாடகை வாகனப் பயணச் சேவைக்கு போதுமான வாடகைக் கார்கள் இருப்பதை உறுதி செய்வது இதன் நோக்கமாகும்.

மூன்று ஆண்டுகள் தடை விதிப்பதால், அத்தகைய வாகனங்களை வாங்கும் நிறுவனங்கள், முக்கியமாக வாடகை வாகனப் பயணச் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களுக்கு குத்தகைக்கு விடுவதை உறுதி செய்ய முடியும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

இது, வணிக நிறுவனங்கள், தனியார் வாடகைக் கார் திட்டத்தின்படி முன்கூட்டியே கார்களை தனிப்பட்டவர்களுக்கு மாற்றுவதைத் தடுக்கும். இல்லையெனில் சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்துக்கான போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அத்தகைய கார்களின் எண்ணிக்கை குறையும்.

இதற்கு முன், இதுபோன்ற வாடகைக் கார்களை மாற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

மாறாக டாக்சிகளை, தனியார் கார்களாக விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது.

ஆணையத்திற்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் என்சிஎஸ், இது குறித்த விவரங்களை முன்கூட்டியே வெளியிட்டுவிட்டது.

இதன் விளைவாக, திட்டமிடப்பட்ட அறிவிப்புக்கு முன்பே இந்தப் புதிய மூன்று ஆண்டு தடை குறித்து சில தொழில்துறை நிறுவனங்களுக்கு தெரிய வந்தது.

“எல்லா பங்குதாரர்களுக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக, எல்டிஏ, இந்தப் புதிய கொள்கையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு முன்பே கொண்டு வர முடிவு செய்தது,” என்று ஆணையம் விளக்கியது.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கும் அனுப்பப்பட்ட அது குறித்த அறிவிப்பு பிப்ரவரி 18ஆம் தேதி மதியம் முதல் வலம் வருகிறது.

“மூன்று ஆண்டுகாலத் தடை, 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்டிஏயின் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்துக்கான போக்குவரத்துத் துறை மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும்,” என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பேஸ்புக் பதிவில் கூறியிருந்தார். டாக்சிகள் மற்றும் தனியார் வாடகைக் கார்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்றார் டாக்டர் கோர்.

இவ்வாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, தனியார் வாடகைக் கார்களின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டின் கடைசியில் இருந்த 81,754 வாடகைக் கார்களுடன் ஒப்பிடுகையில் 11.2 விழுக்காடு கூடி 90,882ஆக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்