வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் (WSG) புதிய திட்டத்தின்கீழ் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு S$72,000 வரை சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை ஆதரவு பெறலாம்.
வெளிநாட்டுச் சந்தைகள் ஈடுபாட்டுத் திட்டத்தின் (Overseas Markets Immersion Programme) கீழ், நிறுவனங்கள் 70% சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை ஆதரவைப் பெறலாம். அவை முறையே, வெளிநாட்டுப் பணிக்கு அனுப்ப தகுதியுள்ள ஒவ்வோர் ஊழியருக்கும் S$5,000 மற்றும் S$3,000 என மாத வரம்புடன், ஒன்பது மாதங்கள் வரை வழங்கப்படும்.
இதற்குத் தகுதி பெற, நிறுவனங்கள் குறைந்தபட்சம் S$4,000 நிலையான மாதச் சம்பளத்தை வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு நவம்பர் 15ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்கள் அடுத்த 24 மாதங்களில் அடையக்கூடிய முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டும் விரிவான தொழில் மேம்பாட்டுத் திட்டத்தையும், பயிற்சிக்குப் பிறகு அடையக்கூடிய குறுகியகால முக்கிய செயல்திறன் அடைவுநிலைகளையும் வழங்க வேண்டும்.
இந்த புதிய திட்டத்தால் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தொடக்கத்தில் S$16 மில்லியனை ஒதுக்கியுள்ளது. அதாவது, 250 உள்ளூர் ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்குள் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டில் பணியமர்த்தப்படுவதற்கான ஆதரவை வழங்க முடியும்.
இதன் அடிப்படையில் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தை, முதலாவது வெளிநாட்டுச் சந்தைகள் ஈடுபாட்டுத் திட்ட பங்காளியாக சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு நியமித்துள்ளது. மேலும் அனைத்துலகமயமாக்கல் வாய்ப்புகளை ஆராய நிறுவனங்களுடன் அது இணைந்து செயல்படும். வெளிநாடுகளுக்கு அனுப்ப விரும்பும் ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்க நிறுவனங்களுடன் சம்மேளனம் இணைந்து செயல்படும்.
தகுதியான தனிநபர்கள் உலகளாவிய, வட்டார விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், வட்டார வணிக மேம்பாடு, சந்தைப் பகுப்பாய்வு, உரிமையாளர் செயல்பாடுகள் போன்ற பங்களிப்புகளில் வெளிநாட்டுப் பணிகளை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு வணிக இயக்க சூழல்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற ஊழியர்கள் தங்கள் வேலையின்போது, சந்தைப் பயிற்சி பெறுவார்கள்.
வெளிநாட்டுச் சந்தையின் கலாசாரம் மற்றும் அங்குள்ள வணிக நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய சக அனைத்துலக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் மூலமும் ஊழியர்கள் பயனடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வெளிநாட்டுச் சந்தைகள் ஈடுபாட்டுத் திட்டத்தின் தொடக்கமானது, சிக்கலான, வெளிநாட்டுச் சந்தைகளில் செயல்படும் அனுபவத்துடன் நமது உள்ளூர் ஊழியர்களை உருவாக்குவதன் மூலம், வெளிநாட்டு வணிக விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதற்கான ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது,” என்று ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி டிலிஸ் போய் கூறினார்.
“பல்வேறு வெளிநாட்டுச் சந்தைகளில் நமது திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் தங்கள் வாழ்க்கைத்தொழில் நலத்துக்குப் பொறுப்பேற்கவும், வெளிநாட்டில் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“வெளிநாட்டு செயல்பாடுகளை நிறுவுதல் என்பது ஒரு சிக்கலான செயல்பாடாகும். கவனமான திட்டமிடல், இடர் மேலாண்மை, சந்தைகள் பற்றிய நல்ல அறிவு, மனித மூலதனத்தின் மீது வலுவான கவனம் ஆகியவை தேவைப்படுகிறது. இது வெளிநாட்டு நடவடிக்கைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாகவும் உருவாகலாம்,” என்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி கொக் பிங் சூன் கூறினார்.
வெளிநாடுகளில் அதிக வணிகங்கள் விரிவடைவதற்கு ஆர்வமாக இருப்பதால், சிங்கப்பூர் வணிகங்கள் வெளிநாட்டுச் சந்தைகள் ஈடுபாட்டுத் திட்டத்தின் பயனைப் பெறும் என்று வர்த்தகச் சம்மேளனம் நம்புகிறது என்றும் கருத்துரைத்தார் திரு கொக்.

