முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், சமூகத்தினர் ஆகியோரை உள்ளடக்கிய பங்குதாரர்களை ஈடுபடுத்துவதில் நிறுவனங்கள் மேம்பட்ட போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்தது.
$300 மில்லியனுக்கும் குறைவான சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்கள் முதல் $1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனங்கள் என 80 நிறுவனங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.
பங்குதாரர்களின் ஈடுபாட்டுத் திட்டங்கள், முடிவுகளை அவற்றின் இயக்குநர் குழுவும் நிர்வாகத் தலைமையும் எவ்வாறு கையாளுகின்றன என்பதை நிறுவனங்கள் பொதுவாக வெளியிடவில்லை என்று ஆய்வு கண்டறிந்தது.
ஆண்டுமுழுதும் தங்கள் முக்கிய பங்குதாரர்களின் முடிவுகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று 10 விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே உதாரணம் காட்டின என்று பிளாக் சன் எனும் தொடர்புத்துறை நிறுவனமும் சிங்கப்பூர் இயக்குநர் கழகமும் கூட்டாக மேற்கொண்ட அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
பங்குதாரர்களின் ஈடுபாடு குறித்து தெரிந்துகொள்ள, அந்த அமைப்புகள் கடந்த மே மாதம் இணைய ஆய்வு ஒன்றை நடத்தின. அதில் சுமார் 200 தற்போதைய இயக்குநர் குழு உறுப்பினர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் கருத்துகள் திரட்டப்பட்டன.
“திறமையான பங்குதாரர் ஈடுபாடு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வாடிக்கையாளர்கள், விநியோகிப்பாளர்கள், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், சமூகத்தினர், கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் நிறுவனங்களிடமிருந்து அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நெறிமுறை நடத்தை ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்,” என்று சிங்கப்பூர் இயக்குநர் கழகத்தின் தலைமை நிர்வாகி டெரன்ஸ் குவேக் கூறினார்.
“தங்கள் வர்த்தகப் பாதையில் பங்குதாரர்களின் மாறிவரும் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் திரு குவேக் கருத்துரைத்தார்.

