ஊழியர்கள் பலர் வேலையிலிருந்து விலகிச் சென்றாலும், 2026ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை சீராக வைத்திருக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் திட்டமிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அடுத்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 4.3 விழுக்காடு ஊதிய உயர்வுக்கென நிறுவனங்கள் ஒதுக்கியுள்ளதாக நிபுணத்துவ சேவை வழங்கும் ஏயோன் (Aon) நிறுவனம் நடத்திய அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டும் இதே விழுக்காடு உயர்வு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
உயிரியல் அறிவியல், மருத்துவக் கருவிகள் துறைகள் 4.6 விழுக்காடு ஒதுக்கி முன்னிலையிலும் எரிசக்தித் துறை 3.5 விழுக்காடு என சற்று பின்தங்கிய நிலையிலும் நிறுவனங்கள் ஊதிய உயர்வை முன்னுரைத்திருக்கின்றன.
கட்டாயமாக வேலைகளில் இருந்து விலக்கப்பட்டோர் 6.6 விழுக்காடு எனவும் தாமாக விலகியோர் 12.7 விழுக்காடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென்கிழக்காசியாவிலேயே ஆக அதிகமானோர் சிங்கப்பூரில் வேலைகளில் இருந்து விலகியுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் இவ்வாண்டு ஜூன் வரையில் சிங்கப்பூரில் 19.3 விழுக்காடு ஊழியர்கள் பணிகளில் இருந்து விலகியுள்ளனர். உற்பத்தித் துறையில் மட்டும் 26 விழுக்காடு ஊழியர்கள் வெளியேறியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊதிய உயர்வைச் சிங்கப்பூர் நிறுவனங்கள் இறுக்கமாகவே வைத்துள்ளன என்று ஆய்வு சுட்டுகிறது.
ஆய்வு ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை 700 நிறுவனங்களில் நடந்தது. ஊதிய உயர்வு மற்றும் பணியிலிருந்து விலகல் பற்றிய அந்த ஆய்வு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் இயங்கும் 15 தொழில்துறைகளில் நடத்தப்பட்டது.
வளர்ந்துவரும் பொருளியல்களில் பணவீக்கமே ஊதிய உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று ஆய்வை நடத்திய ஏயோன் நிறுவனப் பங்காளியும் தென்கிழக்காசிய ஊழியர் திறன் தீர்வுகளுக்கான தலைவருமான திரு ராகுல் சாவ்லா கூறினார்.