இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் பணியாற்ற வருவோரின் திறன்களைச் சிங்கப்பூர் நிறுவனங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை அமைத்துத் தருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ‘என்டிஎஸ்’ (NTS) எனப்படும் பாரம்பரியம் சாரா வளங்கள் (Non-Traditional Sources) தொழிற்பட்டியல் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுமானம், சிவில் பொறியியல், தளவாடத் துறைகளில் பணியாற்றும் உயர்திறன் கொண்ட வேலை அனுமதி அட்டைதாரர்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு (SBF), பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) ஆகிய அமைப்புகள் இணைந்து, வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் இந்தப் பரிந்துரைகளுடன் வேறு பல யோசனைகளையும் முன்வைத்துள்ளன.
பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிறுவனப் பிரதிநிதிகள், மாற்றங்கள் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைக் காட்டிலும், முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவது சிறந்தது என்ற நோக்கில் இந்தப் பரிந்துரைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.
‘எதிர்காலத்திற்குத் தயாராகும் சிங்கப்பூரைக் கட்டமைப்பது, உருமாற்றம், தொழில்நுட்பம், நம்பிக்கை’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, தளவாடத் துறைகள் கடுமையான மனிதவளச் சவால்களை எதிர்கொள்வது தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக எஸ்பிஎஃப் அமைப்பின் மூஸா ஃபஸால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“சிங்கப்பூரர்கள் அதிக ஆர்வம் காட்டாத பல்வேறு வேலைகளுக்கு ஊழியர்கள் தொடர்ந்து தேவைப்படுகின்றனர். எனவே, வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் கொள்கையைத் தளர்த்த வகைசெய்யும் சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம்,” என்று திரு மூஸா கூறினார். வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையில் வரம்பில்லாமல் இருக்கக்கூடாது என்றாலும், அத்தகைய ஊழியர்கள் அவசியமாகத் தேவைப்படும் துறைகளை அடையாளம் காண்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
உலகச் சூழலும் வர்த்தக முறைகளும் உருமாறிவரும் நிலையில், சிங்கப்பூரின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது புத்தாக்கத்தையும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டையும் சார்ந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தற்போதுள்ள மனிதவள விதிமுறைகளின்படி மலேசியா, சீனா, ஹாங்காங், மக்காவ், தென்கொரியா, தைவான் ஆகியவற்றைச் சேர்ந்த வேலை அனுமதி அட்டைதாரர்களை உற்பத்தி, சேவைத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பணியமர்த்தலாம்.
மனிதவள அமைச்சின் ‘என்டிஎஸ்’ பட்டியலின்படி, லாரி ஓட்டுநர்கள், உணவகப் பணியாளர்கள் போன்ற குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டுமே இந்தப் பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

