சிக்கியின் திறன்பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த நிறுவனங்கள்

சிக்கியின் திறன்பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த நிறுவனங்கள்

படம்: சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை

27 Sep 2026 - 10:09 am

3 mins read

சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) திறன்பயிற்சித் திட்டத்தை ஐந்து உறுப்பு நிறுவனங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளன.

பத்து வாரங்களுக்கு நீடித்த அந்தப் பயிற்சித் திட்டம், புதிய உத்திபூர்வ பாதைகளையும் வர்த்தக மாதிரிகளையும் நிறுவனங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தது.

‘பில்ட் இன் சிங்கப்பூர். ஃபோர் த குளோப்’ என்ற சிக்கியின் திறன்பயிற்சி திட்டம் நியூவர்ல்ட் ஃபவுண்டரியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய திட்டம், சந்தை உத்திகள், உற்பத்தி, நிதித் திரட்டு, அனைத்துலக அளவில் விரிவாக்கம் ஆகியவற்றில் உள்ள பயிற்சிகளை ஒருங்கிணைத்தது.

எல்’ஓரியல், துமாசெக், அல்ஃபா உள்ளிட்டவற்றின் பின்னணியைக் கொண்ட வல்லுநர்கள் பயிற்சியில் வழிகாட்டிகளாக இருந்தனர்.

வெறும் கல்விச் சார்ந்த பயிற்சியாக மட்டும் இல்லாமல், பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனைகளை தயாரிப்பு வெளியீடுகள், செயல்முறை விளக்கங்கள், வாடிக்கையாளர் உரையாடல்கள் மூலம் சந்தையில் முன்வைத்துக் காட்டுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

திரு நாகராஜன் புருஷோத்தமனின் எலிவேட்ஸ்பொட் நிறுவனம் ஒரு புதிய தளத்தை உருவாக்கி வெளியிட்டது. அந்தத் தளம், மின்வணிக நிறுவனங்களின் தயாரிப்புகள், ‌சேட்ஜிபிடி, ஜெமினாய் போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளில் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பதையும் வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதையும் கண்காணிக்க உதவுகிறது. அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் உருவாகிவரும் விளம்பர வாய்ப்புகளையும் கண்டறிய அது பயன்படுகிறது.

‌ஷிட்டிஜ் பாத்லாவால் எஸ்பிபவர்டேவ் நிறுவனம், மைக்ரோசாஃப்ட் சார்ந்த பரவலான பணிகளிலிருந்து விலகி, ஒரே ஒரு முன்னணி தயாரிப்பு சார்ந்த சேவைக்கு மாறியது. மைக்ரோசாஃப்ட் கருவிகளை ஏற்கனவே பயன்படுத்திவரும் நிறுவனங்களுக்காக தனிப்பட்ட விதத்தில் பணியிட பாதுகாப்பு மேலாண்மைத் தீர்வு உருவாக்கப்பட்டது. தனது தயாரிப்பை அறிமுகப்படுத்திய எஸ்பிபவர்டேவ் நிறுவனம், பயிற்சியின்போது நேரலை செயல்முறை விளக்கங்களை முன்வைத்தது.

திரு குமாரவேலு வரதராஜனின் தலைமையில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் லீக் நிறுவனம், தற்போதைய விளையாட்டு வணிகத்துடன் இணைந்து, புதிய கார்ப்பரேட், சமூக அளவிலான தொடர் போட்டிகளுக்கான மாதிரியைச் சோதிக்கத் தொடங்கியது. அதன் தேவையை மதிப்பீடு செய்வதற்காக ரோட்டரி சங்கங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களை அதில் ஈடுபடுத்திய ஸ்போர்ட்ஸ் லீக், எதிர்காலத்தில் அந்தக் கோட்பாட்டைப் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நீண்டகால இலக்கை கொண்டுள்ளது.

திருமதி கீதா முகுந்தனின் தலைமையில் செயல்படும் 30 ஆண்டுகள் பழமையான மனிதவள நிறுவனமான செர்விஸ் கனெக்‌‌ஷன்ஸ் எச்ஆர் கன்சல்டென்சி நிறுவனம், நிறுவனங்கள், வேலை தேடுவோரின் “நோக்கத்தின் அடிப்படையிலான” பொருத்தத்தைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆட்சேர்ப்புத் தளத்தை உருவாக்கியது. அந்த நிறுவனம் தற்போதைய வாடிக்கையாளர் தொடர்புகள் மூலம் அந்த புதிய அமைப்பைச் சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ளது.

திரு குமாரவேலுவின் தலைமையில் இயங்கும் தேக்காடாட்எஸ்ஜி நிறுவனம், லிட்டில் இந்தியா பகுதிக்கான சமூகத் தளத்தை ஒரு அனைத்துலக இணைப்பு மாதிரியாக விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்தது. அந்த நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் தனித்துவம் பெற விரும்பும் இந்தியாவின் ஒரு பெரிய சொத்துச் சந்தை அமைப்புடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தனது தளத்தைப் பிற சந்தைகளுக்காகக் கொண்டுவருவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

நியூவர்ல்ட் ஃபவுண்டரி நிறுவனம், ஐந்து நிறுவனங்களும் மிகவும் மாறுபட்ட சவால்களுடன் திட்டத்தில் சேர்ந்ததாகவும், ஒவ்வொரு தொழிலதிபரும் தங்கள் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமான வாய்ப்புகளில் கவனம் செலுத்த உதவுவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் கூறியது.

மேலும், திட்டத்தின் அடுத்த கட்டத்தில் நிறுவனங்கள் உருவாக்கிய மாதிரிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவி வழங்கப்படும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

திறன்பயிற்சித் திட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே நல்ல பிணைப்பு ஏற்பட்டதாக பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விருந்தில் சிக்கியின் இயக்குநர் திரு எஸ் மகேந்திரன் தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களும் தெரிந்தவற்றை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொண்டனர் என்றும் அவர்களிடையே நல்ல ஒத்துழைப்பு இருந்தது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வர்த்தகம்தொழில்திறன் மேம்பாடுபயிற்சிதிட்டம்நிறுவனம்