சிங்கப்பூரில் 20க்கும் மேற்பட்ட கிளைகளில் பலவித விளையாட்டுகளுக்கான உடைகள், காலணிகள், துணைக்கருவிகள் என பலவற்றை ஒரே கூரையின்கீழ் விற்பனை செய்து புகழ்பெற்ற நிறுவனம் ‘டிகெத்லான்’.
1976ஆம் ஆண்டில் பிரான்சில் தொடங்கிய டிகெத்லான், உலகெங்கும் உள்ள 70 நாடுகளில் ஏறத்தாழ 1,700 கிளைகளை நிர்வகிக்கிறது.
சிங்கப்பூரின் ஓட்டப் பந்தய ஆர்வலர்களை ஊக்கப்படுத்த அந்நிறுவனம் புதிய போட்டிகளை இவ்வாண்டின் விளையாட்டு நாள்காட்டியில் அறிமுகப்படுத்துகிறது. அதன் விவரங்களை இன்ஸ்டகிராம் பதிவில் வெள்ளிக்கிழமை (மே 29) டிகெத்லான் வெளியிட்டது.
“டிகெத்லான்’ஸ் கீப்ரன் சிங்கப்பூர்” என்ற பெயரில் அப்போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘கீப்ரன்’ என்பது டிகெத்லான் நிறுவன விற்பனைப் பிரிவின் விளம்பரப் பெயராகும்.
பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நெடுந்தொலைவோட்ட (மாரத்தான்) போட்டி ஒன்றில் ஆதரவாளர்கள் அதில் பங்கேற்ற வீரர்களை ‘கீப் ரனிங்’ என்று முழக்கமிட்டு ஊக்கமளித்தனர். அந்த முழக்கத்தை அங்கு செவிமடுத்த டிகெத்லான் நிறுவனர்கள் அதனை கீப்ரன் என மாற்றி 2021ஆம் ஆண்டுமுதல் பிரான்சில் தயாரிக்கப்படும் பல விளையாட்டு உபகரணங்களின் தொகுப்புகளுக்குப் பயன்படுத்தினர்.
ஓட்டப் பந்தயங்கள் மரினா பே, கரையோரப் பூந்தோட்டங்கள் வட்டாரத்தில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது, ஏனெனில் அதன் சமூக ஊடகப் பதிவில் டிகெத்லான் அந்தப் பகுதியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அனைவருக்குமான போட்டிகள்
சிறுவர்களுக்கான பந்தயங்கள் உட்பட, 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் ஓட்டங்களுடன் 21.1 கிலோ மீட்டருக்கான அரை மாரத்தான் நெடுந்தூரப் போட்டியும் ஏற்பாடு செய்யப்படும்.
போட்டிகளுக்கான முன்பதிவுகள் ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கும்.

