உற்பத்தித்திறன் புத்தாக்க உதவி நிதி மோசடி: ஆடவருக்கு 20 மாதச் சிறை, $1,520,800 அபராதம்

1 mins read
fd20c295-a60b-46a2-8afa-389f23c772c1
படம்: - பிக்சாபே

உற்பத்தித்திறன் புத்தாக்க உதவி நிதித் திட்டத்தில் மோசடி செய்ததாகப் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்த சோபியான் ஒஸ்மான் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தன் மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளை 43 வயதான ஒஸ்மான் ஒப்புக்கொண்டார்.

அவருக்கு 20 மாதச் சிறைத் தண்டனையும் $1,520,800 அபராதமும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

அவர் இந்தக் குற்றத்தை 2014ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார் எனக் கூறப்பட்டது.

ஒஸ்மான் இயக்குநராக இருந்த நிறுவனங்கள் உற்பத்தித்திறனிலும் புத்தாக்கத்திலும் முதலீடு செய்ததாகப் பொய்யான செலவினக் கணக்கை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் அவர் சமர்ப்பித்தார்.

அதற்காக, உற்பத்தித்திறன் புத்தாக்க உதவி நிதித் திட்டத்தின்கீழ் $430,600 மிகையூதியத்தை ஆணையத்திடமிருந்து அந்நிறுவனங்கள் பெற்றன.

இதேபோன்று 16 குற்றச்சாட்டுகள் ஒஸ்மான் மீது சுமத்தப்பட்டிருந்தது. தண்டனை வழங்கியபோது இந்தக் குற்றச்சாட்டுகளையும் நீதிபதி கணக்கில் எடுத்துக்கொண்டார்.

ஒஸ்மான் இந்தக் குற்றங்களைத் தன் கூட்டாளியான முகமது இஸ்கந்தர் அப்துல் ஹக்கீமுடன் இணைந்து புரிந்தார் எனச் சொல்லப்படுகிறது.

முகமது இஸ்கந்தருக்கு இந்தக் குற்றங்களுக்காக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.

இதே திட்டம் தொடர்பான மோசடியில் அவர்மீது சுமத்தப்பட்ட மற்றோர் குற்றச்சாட்டுக்கு எட்டு மாதங்கள் இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் $261,600 அபராதமும் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கும் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்