டிஎஸ்ஓ தேசிய ஆய்வகங்களின் ஊழியர் ஒருவருக்கு மறைமுகமாக லஞ்சம் கொடுத்த நிறுவன இயக்குநர் ஒருவருக்கு பத்து மாதம், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வா லூன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் மூத்த நிர்வாக இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்த 67 வயதான ஜேசன் சுவா ஐக் லெங், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2018ஆம் ஆண்டு டிஎஸ்ஓவின் உள்கட்டமைப்புகளைப் பராமரிக்கும் குழுவின் உதவி மேலாளரான போ பெங் சான் என்பவர், டிஎஸ்ஓ கட்டடம் ஒன்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள குத்தகையாளர்களைத் தேடி வருவதாகத் துணைக் குத்தகையாளரான அலெக்ஸ் லீ இயூ ஹுவாட்டிடம் தெரிவித்தார்.
குத்தகையாளர் அந்தக் குத்தகையைப் பெற்றால், தமக்கு ‘நன்றியுணர்ச்சியின் அடையாளமாக’ (லஞ்சம்) தொகை வழங்கப்பட வேண்டும் என்று போ கேட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2018 ஜனவரி மாதம் டிஎஸ்ஓ நான்கு குத்தகையாளர்களுக்குக் கட்டடப் பணிகளுக்கான ஏலக்குத்தகையை நீட்டித்தது, அவற்றில் மூன்று நிறுவனங்கள் ஜேசன் சுவாவின் நிறுவனத்தை துணைக் குத்தகையாளராகக் கொண்டிருந்தன.
2018 செப்டம்பரில் அந்த மூன்று நிறுவனங்களில் ஒன்றிற்குக் குத்தகை வழங்கப்பட்டது. அது $46 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையது. அதில், இயந்திரவியல் மற்றும் பொறியியல் துறைகளுக்கான துணைக் குத்தகையின் மதிப்பு மட்டும் $31.7 மில்லியனாகும்.
2018 அக்டோபருக்கும் 2019 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், அலெக்ஸ் லீ மற்றொரு நிறுவனத்தைச் சேர்ந்த மலேசிய இயக்குநரின் உதவியுடன் போவிற்குக் குறைந்தபட்சம் $150,000 லஞ்சமாகக் கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
குத்தகையாளர்களிடமிருந்து போ லஞ்சம் பெற்று வருவதாக பிப்ரவரி 2023ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து லஞ்ச ஊழல் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
சுவா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தனது பங்கை ஒப்புக்கொண்டார்.
போ மற்றும் லீ ஆகியோருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
டிஎஸ்ஓ என்பது சிங்கப்பூரின் ஆகப்பெரிய தற்காப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனமாகும். இது தேசியப்பாதுகாப்பு தொடர்பான பொதுப் பணிகளை மேற்கொள்கிறது.
