ஐநா தடைசெய்த கப்பலுக்குக் கொடிப் பதிவுச் சேவை வழங்கியதாக நிறுவனம் மீது குற்றச்சாட்டு

ஐநா தடைசெய்த கப்பலுக்குக் கொடிப் பதிவுச் சேவை வழங்கியதாக நிறுவனம் மீது குற்றச்சாட்டு

1 mins read
06160178-426c-4151-a598-b73bbb7080c6
‘பெட்ரல் 8’ கப்பல். - படம்: வெசல்ஃபைன்டர்

வடகொரியாவிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருள்களை ஏற்றிச்சென்றதற்காக ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) பாதுகாப்பு மன்றத்தால் தடைசெய்யப்பட்ட கப்பல் ஒன்றுக்குக் கொடிப் பதிவுச் சேவைகளை வழங்கியதாக ஒரு நிறுவனத்தின் மீதும் அதன் 49 வயது இயக்குநர் மீதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ‘பெட்ரல் 8’ எனும் அக்கப்பலுக்குக் கொடிப் பதிவுச் சேவைகளை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியது.

வடகொரியாவின் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்பில் இயற்றப்பட்ட தீர்மானங்களின்கீழ், 2017ஆம் ஆண்டில் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தடைப்பட்டியலில் அந்தக் கப்பல் சேர்க்கப்பட்டிருந்தது.

‘பெட்ரல் 8’, 134.5 மீட்டர் நீளமும் 18.8 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு சரக்குக் கப்பல் என ‘மரீன் டிராஃபிக்’ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.

வடகொரியா மீதான ஐநா தடைகள் தொடர்பான சிங்கப்பூரின் விதிகளை மீறியதற்காக அந்த நிறுவனம் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அதே விதிகளின் கீழ், நிறுவனம் அந்தக் குற்றத்தைச் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக அதன் இயக்குநர் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இயக்குநருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை, S$500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். நிறுவனத்திற்கு S$1 மில்லியன்வரை அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாகப்பல்தடை