செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் மின்சிகரெட்டுகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்று சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளது.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள அதன் அலுவலகத்தை அது மூடியது.
அந்த அலுவலகத்திலிருந்து ‘ஹெலோ எஸ்ஜி’ நிறுவனம் நிர்வாகச் சேவைகளை வழங்கியது.
ஆனால் அது சீனாவில் மின்சிகரெட்டுகளை உற்பத்தி செய்யும் ‘ரெல்எக்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதையடுத்து, சிங்கப்பூரில் பதிவான நிறுவனங்கள் பட்டியலிலிருந்து ‘ஹெலோ எஸ்ஜி’ செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியன்று அகற்றப்பட்டது.
அந்நிறுவனம் 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டது.
மின்சிகரெட் வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியிருப்பது இது முதல்முறை அல்ல.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க மின்சிகரெட் உற்பத்தி நிறுவனமான ‘ஜூல் லேப்’பின் வட்டாரத் தலைமையகம் சிங்கப்பூரில் இருந்தது. 2024ஆம் ஆண்டில் அது நொடித்துப்போன பிறகு சிங்கப்பூரிலிருந்து வெளியேறியது.
மின்சிகரெட் புகைப்பது சிங்கப்பூரில் போதைப்பொருள் விவகாரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அக்குற்றத்துக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி (2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி) உரையின்போது தெரிவித்தார்.
மின்சிகரெட்டுகளில் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளும் உள்ளன.
அவற்றில் ‘எட்டோமிடேட்’ வகை போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
அவ்வகை மின்சிகரெட்டுகள் ‘கேபாட்’ என்று அழைக்கப்படுகின்றன.
‘சி’ பிரிவு போதைப்பொருளாக ‘எட்டோமிடேட்’ வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சிகரெட் வர்த்தகம் மூலம் கிடைக்கும் பணத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி மின்சிகரெட் நிறுவனங்கள் கவலைப்படக்கூடும் என்று வழக்கறிஞர் என். கனகவிஜயன் தெரிவித்தார்.
மின்சிகரெட் புகைப்பது அனுமதிக்கப்பட்டுள்ள நாடுகளில் விற்கப்படும் மின்சிகரெட்டுகள் மூலம் கிடைக்கும் பணமும் இதற்குப் பொருந்தும்.
“மின்சிகரெட் மூலம் பெறப்படும் பணத்தைச் சிங்கப்பூரில் பரிவர்த்தனை செய்யும்போது அது கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றமாக வகைப்படுத்தலாம். ஊழல், போதைப்பொருள் கடத்தல், இதர கடுமையான குற்றங்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என்று திரு கனகவிஜயன் கூறினார்.

