எதிர்க்கட்சி வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சியின் (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்படி பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“பின்வரிசை எம்.பி.க்களுடன் ஒப்பிடும்போது வாக்காளர்களுக்குத் தீவிரமான ஒரு தெரிவு உள்ளது,” என்றார்.
பிடோக் 85 ஃபெங்ஷான் உணவு மையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) பாட்டாளிக் கட்சி தொகுதி உலா சென்றபோது செய்தியாளர்களிடம் திரு சிங் பேசினார்.
யாருக்கு வாக்களிப்பது என்பதை சிங்கப்பூரர்கள் கவனமாகப் பரிசீலிக்கும் வகையில், பாட்டாளிக் கட்சி தனது வேட்பாளார் பட்டியலை முன்வைத்துள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
“சிங்கப்பூரர்களின் முடிவு எதுவாயினும் அதை நாங்கள் மதிக்கிறோம்,” என்றார் அவர்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 24) நடந்த மசெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே கணிசமான எண்ணிக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பதைச் சுட்டினார்.
மசெக வேட்பாளர்களை மதிப்பிடும் அதே நிபந்தனைகளை எதிர்க்கட்சியினருக்கும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பிரதமர் வோங்கின் கருத்துகளுக்கு திரு சிங் பதிலளித்தார்.
“நாடாளுமன்றத்தில் முடிந்தவரை அதிகமான மசெக உறுப்பினர்களை நிறுத்த அவர் விரும்புகிறார். இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றார் திரு சிங்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேவை என்று நம்பும் பாட்டாளிக் கட்சியின் கருத்துகள் பிரதமர் இடத்தில் வேறுபடுவதாக திரு சிங் சொன்னார்.
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் தனது வேட்பாளர்களைப் பாட்டாளிக் கட்சி களமிறக்காததற்கான காரணம் குறித்தும் திரு சிங்கிடம் கேட்கப்பட்டது.
“கூடுதல் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் எமது கட்சி பேரளவில் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது ஒரு சிறிய கட்சியின் பார்வையிலிருந்து சாத்தியமானதன்று,” என்று அவர் பதிலளித்தார்.
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் மசெக போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டது மற்ற எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை ‘அவ்வளவு பெரிய எதிர்வினையாக’ தாம் கருதவில்லை என்றார் திரு சிங்.
மக்கள் சக்திக் கட்சித் தலைவர் கோ மெங் செங், தாம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதையும் தடுப்பூசிப் பாதுகாப்புப் பிரச்சினை எழுப்புவதையும் தடுப்பதோடு, தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடவும் மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியிலிருந்து பாட்டாளிக் கட்சி விலகியதாகக் கூறியிருந்தார்.
திரு கோவின் கருத்துகள் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “திரு கோ, திரு கோதான். எதுவும் மாறப்போவதில்லை,” என்றும் இதை அப்படியே விட்டுவிடப்போவதாகவும் திரு சிங் சொன்னார்.
காலை 7 மணியிலிருந்து தொகுதி உலா சென்ற தனது ஈஸ்ட் கோஸ்ட் அணியுடன் இணைந்து மக்களைச் சந்தித்த திரு சிங், அங்குள்ள மக்களின் அன்பான வரவேற்பைப் பற்றிக் கூறினார்.
“சிங்கப்பூரர்கள் தாங்கள் விரும்புவோருக்கு வாக்களிக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். அதை நான் அறிவேன், மதிக்கிறேன்,” என்றார் அவர்.
வரும் நாள்களில் தமது தேர்தல் பிரசாரத் திட்டங்களைப் பாட்டாளிக் கட்சி மக்களுக்குத் தெரியப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.