தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியலில் போட்டி நல்ல விஷயமாக இருக்க வேண்டும்: பாட்டாளிக் கட்சி

2 mins read
99001bae-6ddd-44fb-a1eb-f1945a682c98
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர் பெரிஸ் வி.பரமேஸ்வரி. - படம்: மீடியாகார்ப்

அரசியலில் போட்டி நல்ல விஷயமாக இருக்க வேண்டும் என ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர் பெரிஸ் வி.பரமேஸ்வரி கூறியுள்ளார்.

வியாழக்கிழமை (மே 1) தொலைக்காட்சியில் கட்சி அரசியல் ஒலிபரப்பின்போது தமிழில் பேசிய அவர் இக்கருத்தை முன்வைத்தார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய சுகாதாரக் குழுமங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கைப்பேசி நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட எம்ஆர்டி சேவை வழங்குநர்களை அமைத்து அரசாங்கமே போட்டியை ஊக்குவிப்பதை திருவாட்டி பரமேஸ்வரி சுட்டினார்.

அரசாங்கக் கொள்கைகளுக்கு மாற்றான பரிந்துரைகளைப் பாட்டாளிக் கட்சி தொடர்ந்து முன்வைக்கும் என்று கூறிய அவர், கல்வியாளர்களும் தொழில்துறை நிபுணர்களும் பொதுமக்களும் அவற்றை மதிப்பிடலாம் எனக் கருதினார்.

சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்து அளிக்கப்படும் நெருக்குதலால் காலப்போக்கில் நல்ல பரிந்துரைகளை மக்கள் செயல் கட்சி (மசெக) செயல்படுத்த வேண்டியிருக்கலாம் என்று திருவாட்டி பரமேஸ்வரி சொன்னார்.

“நாடாளுமன்றத்தில் தான் எதிர்கொள்ளும் சரிபார்ப்புகளால் சிங்கப்பூரர்களின் அக்கறைகளுக்கு மசெக அரசாங்கம் செவிமடுப்பதாக நீங்கள் கருதினால், எங்களுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் ஆரோக்கியமான போட்டியுடன் எங்களால் மசெகவை ஈடுபடுத்த முடியும்,” என்றார் அவர்.

நாடாளுமன்றத்திற்குப் பாட்டாளிக் கட்சியை வாக்காளர்கள் தேர்வுசெய்தால், வாழ்க்கைச் செலவினம் குறித்த விவகாரங்களை தாங்கள் தொடர்ந்து எழுப்பப் போவதாக திருவாட்டி பரமேஸ்வரி உறுதியளித்தார்.

“எங்களது பரிந்துரைகளை மசெக செயல்படுத்தும்போது எங்களுக்கு அக்கட்சி அங்கீகாரம் வழங்காவிட்டால் பரவாயில்லை. சிங்கப்பூரர்கள் பலனடைந்தால் எங்களுக்கு அதுவே போதும்,” என்றார் அவர்.

அடுத்ததாக, புதியதொரு போட்டி உணர்வைக் கடைப்பிடிக்கலாம் என திருவாட்டி பரமேஸ்வரி அறைகூவல் விடுத்தார்.

தேசிய நிதியிருப்புப் பயன்பாடு, குற்றவியல் நீதித்துறைக்கு மேம்பாடுகள், பொருள், சேவை வரி உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பாட்டாளிக் கட்சி கவனமாக ஆராய்ந்து அதற்கேற்ற பரிந்துரைகளை முன்வைப்பதாக அவர் எடுத்துரைத்தார்.

இந்தத் தேர்தலில் அனைத்து பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்வுசெய்தாலும், ஆட்சி செய்ய மசெக அரசாங்கத்திடம் இன்னமும் வலுவான அதிகாரம் இருக்கும் என திருவாட்டி பரமேஸ்வரி வலியுறுத்தினார்.

நன்கு தகுதிபெற்ற, அர்ப்பணிப்புடைய, தன்னிச்சையான பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சரிபார்ப்புக்கு உட்பட்டு அரசாங்கம் ஆட்சி செய்யும் என்றார் அவர்.

“இப்போது இருப்பதைவிட கூடுதலான பொறுப்புடைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏற்க ஒரு சமுதாயமாக நாம் ஒன்றுபட்டுள்ளோம், ஒரு பொருளியலாக துடிப்புடன் இருக்கிறோம், ஒரு தேசமாக முதிர்ச்சியுடன் இருக்கிறோம்,” என்று திருவாட்டி பரமேஸ்வரி கூறினார்.

தமது உரையின் நிறைவாக பாட்டாளிக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “புதிய பரிவு, போட்டி, நம்பிக்கை உணர்வுடன் நாங்கள் சிங்கப்பூருக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்