‘நாளைய செய்தி, இன்று’ எனும் மாணவர் புத்தாக்கக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தக் கருத்தரங்கு திங்கட்கிழமையன்று (நவம்பர் 23) கூகல் சிங்கப்பூர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூகல் சிங்கப்பூர் அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்ததுடன், இன்றைய காலகட்டத்தில் செய்திகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்பது குறித்து நிபுணர்களிடம் மாணவர்கள் கேட்டறிந்தனர்.
இளையர்களைக் கவரும் வகையிலான புத்தாக்கச் செய்தி உள்ளடக்கங்களையும் அனுபவங்களையும் உருவாக்குவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் சவாலாக இப்போட்டி அமைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் திறன்கள், உள்ளடக்கம் மற்றும் விநியோகம், வாசகர் ஈடுபாடு ஆகிய துறைகளை மேம்படுத்தும் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக எஸ்பிஎச் மீடியாவும் கூகல் நிறுவனமும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.
நிகழ்ச்சியின் முதல் நாளில், நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்த மாணவர்களிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், கூகல் ஆகியவற்றின் முன்னணித் தலைவர்களும் நிபுணர்களும் உரையாற்றினர்.
காணொளி உள்ளடக்க உருவாக்கம், இருவழித் தொடர்பு வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற ஊடகத் துறையின் நவீன போக்குகள், நடைமுறைகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
இதன்மூலம் இன்றைய செய்திகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதை மாணவர்கள் நன்கு புரிந்துகொண்டனர். பங்கேற்பாளர்கள் தங்கள் செய்தித் தீர்வுகளை மூன்று நிமிடக் காணொளி மூலமாகவும் இரண்டு நிமிட விளக்கப் படைப்பு மூலமாகவும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தோ பாயோ நார்த்தில் உள்ள எஸ்பிஎச் மீடியா செய்தி நிலையத்தில் நடுவர் குழுவினர்முன் படைப்பர்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொடக்கக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றின் மாணவர்களுக்காக நடத்தப்படும் இப்போட்டியில் 10 உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றுள்ளன.
முதலிடம் பெறும் அணிக்கு $3,000 ரொக்கப் பரிசுடன், எஸ்பிஎச் மீடியாவில் ஆறு மாதங்கள் வரையிலான தொழிற்பயிற்சி வாய்ப்பும் வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே $2,000 மற்றும் $1,000 பரிசுத்தொகை வழங்கப்படும்.
“ஒரே கருவியில் புகைப்படக் கருவி, படத்தொகுப்பு வசதி, உலகளாவிய வாசகர்களைச் சென்றடையும் வாய்ப்பு ஆகிய அனைத்தையும் பெற்று வளர்ந்த அதிர்ஷ்டசாலித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நீங்கள். புதிய கருவிகள், புதிய வடிவங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, உங்கள் தலைமுறையினருக்கு நம்பகமான செய்திகளைக் கண்டறிந்து, உண்மைத்தன்மையைச் சரிபார்த்து வழங்கும் எங்கள் முயற்சிகளில் இணைந்து பணியாற்ற எஸ்பிஎச் மீடியா உங்களை வரவேற்கிறது,” என்று நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய எஸ்பிஎச் மீடியாவின் நிர்வாக இயக்குநர் குவெக் யூ சுவாங் தெரிவித்தார்.
