சிங்கப்பூர் தனது பாதுகாப்பையும் வெற்றியையும் ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் எச்சரித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு எழுந்துவரும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மெத்தனப்போக்கு குறைத்துவிடும் என்று அவர் கூறினார்.
தென்கிழக்காசிய வரலாற்றில் சிங்கப்பூரின் 61 ஆண்டுகால சுதந்திரக் காலம் ஒரு விதிவிலக்காகும் என்றும் புவியியல் சவால்களைத் தாண்டி உலக நாடுகளோடு இணைந்திருப்பதே நாட்டின் இருப்புக்கு இன்றியமையாதது என்றும் அமைச்சர் சான் தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களில் முன்னரே எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தபோதிலும், மெத்தனப்போக்கினால் பலர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புவியியல், விநியோகக் கட்டமைப்பு போன்றவற்றை ஆயுதமாக்கும் பொருளியல் சவால்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வுக் கழகம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய அவர், ஐந்து முக்கிய முன்னுரிமைகளை மேற்கோள்காட்டி பேசினார்.
முதலாவதாக, குறுகியகால அரசியல் நலன்களைவிடக் கூட்டாகச் செயல்பட்டுப் பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க வேண்டும். இரண்டாவதாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற கொள்கை வகுப்பிலும் செயலாக்கத்திலும் சீரான தன்மையைப் பேண வேண்டும். மூன்றாவதாக, வர்த்தகத் தடைகளுக்கு மத்தியிலும் உலக நாடுகளுடன் திறந்த மனத்தோடும் தொடர்பிலும் இருக்க வேண்டும்.
நான்காவதாக, மற்றவர்களால் எளிதில் மாற்றியமைக்க முடியாத புதிய ஆற்றல்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நிலைத்திருக்க வேண்டும். ஐந்தாவதாக, எந்தவொரு மூலத்தையும் சார்ந்திருக்காமல் விநியோகக் கட்டமைப்புகளையும் ஏற்றுமதிச் சந்தைகளையும் பன்முகப்படுத்தி மீள்திறனை வலுப்படுத்த வேண்டும்.
அமெரிக்காவுடனான தற்காப்பு உறவு குறித்து பேசிய அமைச்சர் சான், வட்டாரப் பாதுகாப்பிலும் பொருளியலிலும் அமெரிக்கா ஒரு முக்கியமான பங்குதாரராகத் தொடர்கிறது என்று கூறினார். அமெரிக்காவுடனும் ஆசியானுடனும் ஆக்கபூர்வமான உறவைப் பேண விரும்புவதாகவும் குறிப்பிட்ட நபர் அல்லது நிர்வாகத்தைச் சாராமல் நீண்டகால அடிப்படையில் நம்பகமான உறவை உருவாக்குவதே சிங்கப்பூரின் நோக்கம் என்றும் அமைச்சர் சான் தெரிவித்தார்.

