தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் ஆதரவை மெத்தனமாக எண்ணமாட்டோம்: டாக்டர் டான்

1 mins read
7731e7fe-2c47-4678-8b42-8267a7881b70
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டாக்டர் டான் செங் பொக் தமது கட்சி சிரமமான இரவைக் கடந்ததாகக் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டாக்டர் டான் செங் பொக் பொதுத் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து கருத்துரைத்த டாக்டர், கட்சி கரடுமுரடான இரவைக் கடந்துள்ளதாக வருணித்தார்.

“கட்சிக்கு வாக்களித்தோருக்கு எங்கள் உளமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவை நாங்கள் ஒருபோதும் மெத்தனமாகக் கருதமாட்டோம்,” என்று டாக்டர் டான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

“உங்கள் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்,” என்ற டாக்டர் டாம், எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல தேர்தல் எல்லை மாற்றங்கள், குறைவான வளங்கள் போன்ற பல இக்கட்டுகளை எதிர்கொண்டதாகக் கூறினார்.

“அப்படியிருந்தும் நீங்கள் தைரியத்தையும் உற்சாகத்தையும் தந்தீர்கள்,” என்றார் அவர்

கட்சிக்கு வாக்களிக்காதோரின் தீர்மானத்தை மதிப்பதாகவும் சொன்ன டாக்டர் டான், எதிர்காலத்தில் அவர்களின் நம்பிக்கையைப் பெற இன்னும் கடுமையாக உழைக்க வாக்குறுதியளித்தார்.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் வெற்றிபெற்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீக்கும் அவரது அணிக்கும் டாக்டர் டான் வாழ்த்துக் கூறினார்.

ஆறு தொகுதிகளில் 13 வேட்பாளர்களை இறக்கிய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 24.17 விழுக்காட்டிலிருந்து 39.99 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.

வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியைத் தவிர சுவா சூ காங் குழுத்தொகுதி, பைனியர், புக்கிட் கோம்பாக், கெபுன் பாரு, மேரிமவுண்ட் ஆகிய தனித்தொகுதிகளிலும் கட்சி போட்டியிட்டது.

குறிப்புச் சொற்கள்