இஆர்பி 2.0 கருவியால் மின்சாரம் குறைவதாகப் புகார்

2 mins read
0ca69a94-c4d9-4fa9-a2cb-36adaabd5aa1
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மோட்டார்சைக்கிளோட்டிகள் புதிய ஒபியு கருவியைப் பொருத்தத் தொடங்கினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய மின்னியல் சாலைக் கட்டணக் கருவியால் மோட்டார்சைக்கிள்களில் உள்ள மின்கலங்களின் மின்சாரம் விரைவில் குறைந்துவிடுவதாக மோட்டார்சைக்கிளோட்டிகள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

பழைய கருவியைவிட புதிய இஆர்பி 2.0 கருவியால் மின்சாரம் வேகமாகக் குறைவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்பாக, மோட்டார்சைக்கிளைப் பல நாள்களுக்குப் பயன்படுத்தாவிட்டாலும் அந்த நிலை ஏற்படுவதாகக் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் புதிய கருவியைப் பொருத்திய மோட்டார்சைக்கிளோட்டிகள் கூறினர்.

எனினும், புதிய கருவியால் மின்கலத்தில் மின்சாரம் குறைவதற்கான சாத்தியம் இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் மோட்டார்சைக்கிள்களைப் பழுதுபார்க்கும் கடைகளும் தெரிவித்தன.

மின்கலங்கள் பழையதாகிவிட்டதாலும் அடிப்படை மின்சாரப் பிரச்சினைகள் இருப்பதாலும் அந்த நிலை ஏற்படுவதாக அவை குறிப்பிட்டன.

செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட புதிய இஆர்பி 2.0 கட்டமைப்புக்காகப் புதிய ஓபியு கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மோட்டார்சைக்கிளோட்டிகள் புதிய கருவியைப் பொருத்தத் தொடங்கினர். இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் புதிய கருவிகள் பொருத்தப்பட்டிருக்கவேண்டும்.

இவ்வாண்டு அக்டோபர் நிலவரப்படி 146,000க்கும் அதிகமான அதாவது 97 விழுக்காட்டு மோட்டார்சைக்கிள்களில் புதிய ஓபியு கருவிகள் பொருத்தப்பட்டுவிட்டன.

மின்கலங்களில் மின்சாரம் விரைவாகக் குறைவதாகக் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு மோட்டார்சைக்கிளோட்டிகளிடமிருந்து புகார் வந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பழைய கருவியைப் போல புதிய கருவியும் செயல்பட மின்சாரம் தேவை. ஆனால் மோட்டார்சைக்கிளைப் பயன்படுத்தாமல் இருக்கும்போது புதிய கருவி மிகவும் குறைவான மின்சாரத்தைத்தான் பயன்படுத்துகிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன் மோட்டரிங் இணையத்தளம் குறிப்பிட்டது.

மோட்டார்சைக்கிள்களைப் பழுதுபார்க்கும் கடைகள் புதிய கருவிகளைப் பொருத்தும்போது வழக்கமாக நாட்பட்ட மின்கலங்களை மாற்றும்படி அறிவுறுத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்