அறிவிக்கப்படாத எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே அதிக வீடுகளை அரசு ஊழியர்கள் வாங்கியதாகப் புகார்: நாடாளுமன்றத்தில் விவாதம்

அறிவிக்கப்படாத எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே அதிக வீடுகளை அரசு ஊழியர்கள் வாங்கியதாகப் புகார்: நாடாளுமன்றத்தில் விவாதம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 5:24 pm

2 mins read

திட்டமிடப்பட்ட, ஆனால் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ரயில் நிலையங்களுக்கு அருகே அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அதிகளவில் சொத்துகளை வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால், நாளை (அக்டோபர் 6) நாடாளுமன்றம் கூடும்போது இதுகுறித்து விவாதிக்கப்படவிருக்கிறது.

திங்கட்கிழமை (அக்டோபர் 5) வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த விவாதம் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாப நோக்கற்ற ‘தேசிய பொருளியல் ஆய்வு செயலகம்’ செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியதாகக் கூறப்படும் தகவல் இடம்பெற்றுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளைப் பொதுச்சேவைப் பிரிவு மறுபரிசீலனை செய்ததா, அரசாங்கம் தாமாகவே முன்வந்து ஆராயுமா அல்லது உறுதிப்படுத்துமா, இதற்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம், பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத அரசாங்கத் தகவல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் கண்டறியவும் தற்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்றும் அவர் கேட்டுள்ளார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினரான அசார் ஒத்மான், இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளதா எனக் கேட்டுள்ளார்.

பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெரால்ட் கியாம் (அன்ஜூனிட் குழுத் தொகுதி), இத்தகையச் செயல்கள் சட்டபூர்வக் கடமைகள் அல்லது அரசுப் பணி விதிகளை மீறுவதாக அமையுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில் திட்டப் பணிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் 2007ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையே வாங்கிய சொத்துகள் குறித்து ஏற்கெனவே அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்தச் சொத்துகள், பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே அமைந்துள்ளன.

பொதுச்சேவைப் பிரிவு, செப்டம்பர் 25 வெளியிட்ட அறிக்கையில், வாங்கப்பட்ட சொத்துகளை அடையாளம் கண்டு வருவதாகவும், அதில் ஏதேனும் தவறான நடத்தைகள் இருக்கிறதா என்பதை மதிப்பிட அவற்றை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“ஓர் அதிகாரி தனது தனிப்பட்ட நலனுக்காக வீடு வாங்க அதிகாரபூர்வத் தகவல்களைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்தால், அந்த வழக்கு மேல் விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும்,” என்றும் அது மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்