கிராஞ்சிப் பகுதியில் ‘மீன்பிடிக்கத் தடை’ எனும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தபோதிலும், அங்குக் குதிரைலாட நண்டுகள் பிடிக்கப்படுவது குறித்து ஆடவர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று (நவம்பர் 21) ரெடிட் சமூக ஊடகத் தளத்தில் அவர் பகிர்ந்த காணொளி ஒன்றில், பிடிக்கப்பட்ட குதிரைலாட நண்டுகளை மீண்டும் தண்ணீரில் விடுமாறு ஆடவர் ஒருவரிடம் அவர் கேட்டுக்கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும், கிராஞ்சி நீர்த்தேக்கத்திலிருந்து வலைகளைப் பயன்படுத்தி மக்கள் அந்த நீர்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதைக் காட்டும் படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அங்குப் பிடிக்கப்பட்டவற்றில் குறைந்தது நான்கு குதிரைலாட நண்டுகளைத் தாம் கண்டதாக அந்த ரெடிட் பயனர் தெரிவித்தார். அப்பகுதியில் ஏராளமான கண்காணிப்பு கேமராக்களும் ‘மீன்பிடிக்கத் தடை’ அறிவிப்புப் பலகைகளும் இருந்தும், இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது என்றும், தாம் அங்கு எந்தவொரு சட்ட அமலாக்க நடவடிக்கையையும் நேரில் காணாததால், இது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா எனத் தமக்குச் சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் மீன்பிடிப்பதையும் வலைகளைப் பயன்படுத்துவதையும் தாம் பார்த்ததாகவும் ஆனால் அவர்கள் அனைவருமே குதிரைலாட நண்டுகளைத்தான் பிடித்தார்களா என்பதைத் தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ஆடவர் கூறினார்.
அவர்களில் சிலரிடம் குதிரைலாட நண்டுகளை விடுவிக்குமாறு தாம் கேட்டுக்கொண்டபோது, ஒருவர் மட்டுமே அதற்கு இணங்கியதாகவும் மற்றவர்கள் தமது வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டதாகவும் அவர் ஏஷியாஒன் ஊடகத்திடம் தெரிவித்தார். அந்த நபரும் குதிரைலாட நண்டுகளின் வால்களைப் பிடித்துத் தூக்கி மீண்டும் தண்ணீருக்குள் வீசியதாக அவர் மேலும் கூறினார்.
தமது இந்தப் புகாரைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்குமேல் அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதாக தேசியப் பூங்காக் கழகம் தமக்குப் பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் ‘எளிதில் பாதிக்கப்படும் நிலையில்’ உள்ள உயிரினமாகக் குதிரைலாட நண்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
