முதியவரைத் தள்ளிவிட்டது தொடர்பாகக் காவல்துறையில் புகார்

முதியவரைத் தள்ளிவிட்டது தொடர்பாகக் காவல்துறையில் புகார்

1 mins read
2fe3f05d-7559-4133-8ce2-5748f09e8645
சிறுமியின் தந்தை, முதியவரை (வலது) பலமாகத் தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து முதியவர் கீழே விழுந்த காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. - படம்: ஃபேஸ்புக்/பெய் இங் வன்டான் நூடல்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் சிறுமியின் தலையை மென்மையாகத் தட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முதியவர் ஒருவர் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) உறுதிப்படுத்தியது. ரோக்சி சதுக்கம் வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள காப்பிக்கடையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவர், நடப்பதற்குச் சிரமப்படுபவர். சம்பவத்தன்று அவர் மேசைகள் மீது கை வைத்து மெதுவாக நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த ஒரு சிறுமியின் தலையை மென்மையாகத் தட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுமியின் தந்தை, முதியவரைக் கடிந்து அவரைப் பலமாகத் தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைகுலைந்துபோன முதியவர் கீழே விழுந்த காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

அங்கிருந்த உறவினர்கள் அவருக்கு உதவினர். தொடக்கத்தில் இச்சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கருதிய முதியவருக்கு, பின்னர் முதுகுவலி ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் காணொளியைப் பதிவேற்றிப் புகார் அளித்தனர்.

முதியவரைத் தள்ளிவிட்டதை அடுத்து, சிறுமியின் தந்தை அவருடன் அமர்ந்து, தான் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு உணர்வினால் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறி மன்னிப்பு கேட்டு, பானம் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிகிறது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்