வடக்கு-தெற்குப் பாதையின் மேம்பாலச் சாலைக்கான அடித்தளப் பணிகளில் பாதி நிறைவடைதல்

வடக்கு-தெற்குப் பாதையின் மேம்பாலச் சாலைக்கான அடித்தளப் பணிகளில் பாதி நிறைவடைதல்

2 mins read
நிலப் போக்குவரத்து ஆணையம் தகவல்
4ec36fce-a5b7-4654-a69e-286af0d3f2db
மேம்பாலச் சாலைக்கான பணிகளைக் கட்டுமான ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். - படம்: சாவ்பாவ்

வடக்கு-தெற்குப் பாதையின் 8.8 கிலோமீட்டர் மேம்பாலச் சாலைக்கான நிலத்தூண் அடிமானம் (piling) இடும் பணிகளில் பாதி நிறைவடைந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகள் 2021ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் தொடங்கியதாகவும் அதையடுத்து ஒட்டுமொத்த மேம்பாலச் சாலைக்கும் பணிகள் நடந்துவருவதாகவும் ஆணையத்தின் வடக்கு-தெற்குப் பாதைத் திட்டத்தின் துணை இயக்குநர் திரு கிரிஸ் அன் கூறினார்.

மேம்பாலச் சாலைக்காக லெண்டோர் அவென்யூ, செம்பவாங் ரோடு ஆகியவற்றில் நிலத்தின் மேல் நடக்க வேண்டிய கட்டுமானப் பணிகளும் 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.

முதன்முதலில் 2008ஆம் ஆண்டில் விரைவுச்சாலையாகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் 2016ஆம் ஆண்டில் ‘போக்குவரத்து முன்னுரிமை பாதை’ திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.

பேருந்துகளுக்கும் மிதிவண்டிகளுக்கும் உரிய தடங்களையும் கொண்ட இத்திட்டம் நிறைவடையும்போது, 21.5 கிலோமீட்டர் வடக்கு-தெற்குப் பாதைவழி உட்லண்ட்ஸ், செம்பவாங், ஈசூன், அங் மோ கியோ போன்ற பகுதிகளிலிருந்து நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும்.

திட்டத்தில் 8.8 கிலோமீட்டர் மேம்பாலச் சாலையுடன் 400 மீட்டர் நிலவழிச் சாலைகள், 12.3 கிலோமீட்டர் நிலத்தடி சுரங்கச் சாலைகள் ஆகியவையும் இடம்பெறுகின்றன. அட்மிரல்டி ரோடு வெஸ்ட் தொடங்கி லெண்டோர் அவென்யூ வரை அமையவுள்ள மேம்பாலச் சாலை, 2027ஆம் ஆண்டில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து, லெண்டோர் அவென்யூவிலிருந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே வரையிலான சுரங்கச் சாலைகள் 2029ல் முடிவடைந்திடும்.

இதற்கிடையே, இக்குறிப்பிட்ட கட்டுமானத் திட்டம் தொடர்பில் பல வேலையிடச் சம்பவங்கள் நடந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஆணையம் வலியுறுத்தியது.

மேலும், வடக்கு-தெற்கு பாதைத் திட்டம் நிறைவடையும்வரை சாலைப் போக்குவரத்து மாற்றப்படுவது இடையிடையே நடக்கும் என்று திரு அன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்போக்குவரத்துசெம்பவாங்வடக்கு-தெற்கு பாதைகட்டுமானம்