காத்தோங் வட்டாரத்தில் கார் ஒன்று தனியார் வீடு மீது மோதியதில், வீட்டின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) காலை நிகழ்ந்தது.
டெம்பலிங் ரோட்டில் சென்றுகொண்டு இருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக முற்பகல் 11.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை கூறியது.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் 37 வயது ஓட்டுநர், அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
அந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கார் மோதிய வீட்டில் ‘லியு ஃபு சி ஃபாங் சாய்’ (Liu Fu Si Fang Cai) எனும் பெயரில், வீட்டிலிருந்தே நடத்தப்படும் தனியார் உணவக வணிகம் செயல்பட்டு வருகிறது.
அந்த வணிகத்தின் பிரதிநிதி ஒருவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் கூறுகையில், சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், விபத்து நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் ஊஞ்சல் ஒன்றும் சேதமடைந்துள்ளதால், வணிக நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு இருக்காது என்றார் அவர்.
சுவரில் ஏற்பட்ட துளை ஒப்பந்ததாரர் ஒருவரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்புப் பணிகள் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
