குடும்பங்களுக்கு ஆதரவு குறித்த பேரளவிலான மறுஆய்வு: பிரதமர் வோங்

குடும்பங்களுக்கு ஆதரவு குறித்த பேரளவிலான மறுஆய்வு: பிரதமர் வோங்

3 mins read
30afab13-2928-4e3a-9435-abcf39d0e4f9
சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிடப்பட்ட தேசிய தினச் செய்தியில் பிரதமர் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

குடும்பங்களுக்கான ஆதரவு குறித்து பேரளவிலான மறுஆய்வு மேற்கொள்ளப்படுவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவு வழங்க புதிய கண்ணோட்டத்தில் மறுஆய்வு இடம்பெறுகிறது.

திருமணம், பிள்ளைப்பேற்றுடன், பிள்ளை வளர்ப்புச் செலவு, கட்டுப்படியான குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றில் குடும்பங்களின் சுமையைக் குறைக்கவும் அரசாங்கம் திட்டங்களை அறிவிக்க உள்ளது என்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) வெளியிட்ட தேசிய தினச் செய்தியில் பிரதமர் வோங் தெரிவித்தார்.

குறைந்த பிறப்பு விகிதத்தைச் சீரமைக்க அமைக்கப்பட்ட அமைச்சுகளுக்கிடையிலான பணிக்குழு, ஏப்ரல் மாதம் முதல் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி இடம்பெறும் தேசிய தினப் பேரணி உரையில் இத்திட்டங்கள் குறித்த விவரங்களைப் பகிர்வதாக தேசிய விளையாட்டரங்கில் பதிவு செய்யப்பட்ட தேசிய தினச் செய்தியில் அவர் கூறினார்.

போட்டி நிறைந்த தற்போதைய சூழலில், பணிகளையும் குடும்பத்தையும் ஒரே நேரத்தில் கவனித்துக் கொள்ள சிரமப்படும் பெற்றோர்களின் கவலைகளை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

உலகளவில் குடும்ப வாழ்க்கை சிரமம் மிகுந்ததாகி வருகிறது. எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த தொடக்கத்தை அளிக்க விரும்புகின்றனர். பலர் தங்கள் வேலையையும் மூப்படையும் பெற்றோரையும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்கின்றனர். அதனால் பலர் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர் என்று திரு வோங் விவரித்தார்.

மக்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் குறிக்கோள்களைத் தொடரவும் மனநிம்மதியுடன் குடும்பங்களைப் பேணவும் நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்கவும் சிங்கப்பூர் ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்று பிரதமர் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

மாற்றங்கள் நிறைந்த உலகச் சூழலில் சிங்கப்பூரின் பொருளியல் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

அதிவேகமான புத்தாக்கம், சவால்களையும் ஐயங்களையும் தந்திருந்தாலும் எண்ணிப்பார்க்க முடியாத வாய்ப்புகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் அவை ஏற்படுத்தித் தருகின்றன என்ற திரு வோங், நாம் பின்தங்கிவிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். எனினும், எல்லாப் புதிய தொழில்நுட்பங்களையும் கண்மூடித்தனமாக ஏற்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

மக்களுக்குச் சேவையாற்றக்கூடிய, சமூகங்களை வலுப்படுத்தக்கூடிய, வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய கருவிகளாகத் தொழில்நுட்பம் இருக்கவேண்டும்.

பொருளியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்றார் திரு வோங்.

செயற்கை நுண்ணறிவால் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்று ஊழியர்கள் பலர் அச்சம் கொள்கின்றனர். உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மேம்பட்ட வேலைகளை உருவாக்கவும் அவற்றைப் பயன்படுத்துவோம்.

அதேவேளையில், ஒவ்வோர் ஊழியர்க்கும் ஆதரவளிக்கும் வகையில் திறன்களிலும் பயிற்சிகளிலும் முதலீடு செய்வோம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உற்பத்தித் திறனை உயர்த்தவும் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிங்கப்பூர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.

பிள்ளைகளை மின்னிலக்க உலகத்திலிருந்து பாதுகாப்பாக வழிநடத்த வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

உலக அரசியல் சூழல் நிச்சயமற்றதாக இருந்துவரும் நிலையில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதைச் சுட்டிய திரு வோங், அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள ஆதரவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இன்றைய சவால்களைத் தாண்டி, எதிர்காலத்திற்காகச் சிங்கப்பூரைத் தயார்செய்யவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூர் கடந்து வந்த பாதையுடன் தேசிய தினச் செய்தியைத் தொடங்கிய பிரதமர், வரலாற்று நினைவுகளுடன் நிறைவு செய்தார்.

ஒரே மக்களாகவும் ஒரே தேசமாகவும் ஒன்றிணைந்து செயல்படும் கடப்பாட்டை 60 ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டின் உறுதிமொழியாகக் கொண்டோம். இன்றைய பிளவுபட்ட உலகில் அது சிங்கப்பூருக்கு மிகப் பொருத்தமானது.

உறுதிமொழியில் மாறாத பற்று கொண்டிருப்பதும் ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பதும் மேம்பட்ட, மேலும் வலிமையான சிங்கப்பூரை ஒன்றிணைந்து உருவாக்க உதவும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்