நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் நான்காம் ஆண்டு மருத்துவப் பள்ளி மாணவர்கள் 2026ஆம் ஆண்டு முதல் பிரேதப் பரிசோதனைகளைச் செய்வதற்கான வாய்ப்பைப் பெறவிருக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியில் அதுபோன்ற பாடத்திட்டம் மாணவர்களுக்கு இதற்குமுன் வழங்கப்படவில்லை.
இனி ஐந்தாண்டு கல்வியை மேற்கொள்ளும் மருத்துவ மாணவர்களுக்குப் பிரேதப் பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை பாடத்துக்காக அமெரிக்காவிலிருந்து உறையவைக்கப்பட்ட பிரேதங்கள் கொண்டுவரப்படும் என்று மருத்துவப் பள்ளியின் உடற்கூறியல் துறைத் தலைவர் இணைப் பேராசிரியர் ஸ்ரீநிவாசுலு ரெட்டி மொகலி கூறினார். ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 9லிருந்து 10 பிரேதங்கள் தேவைப்படும் என்றார் அவர்.
அறிவியலுக்கு உடல் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு சிங்கப்பூரில் இருந்தாலும் இங்குள்ள அனைத்து மருத்துவப் பள்ளிகளிலும் பயன்படுத்தக்கூடிய அளவில் பிரேதங்கள் கிடைப்பதில்லை என்றார்.
டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் பிரேதப் பரிசோதனை வகுப்புகளை ஒரு முக்கியப் பாடமாக எடுக்க முடியும். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக யோங் லூ லின் மருத்துவப் பள்ளி பிரேதப் பரிசோதனையை ஓர் இணைப்பாடமாக வழங்குகிறது.
மனிதப் பிரேதங்களைப் பரிசோதனை செய்வது மனித உடற்கூறியல் எப்படிச் செயல்படுகிறது என்ற தெளிவான புரிதலை மாணவர்களுக்குத் தரும் என்று பேராசிரியர் ரெட்டி சொன்னார்.