பேருந்துகளில் புதிய சோதனை முயற்சி: சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் கவலை

பேருந்துகளில் புதிய சோதனை முயற்சி: சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் கவலை

சக்கர நாற்காலிக்கான இடத்தைக் குழந்தைகள் தள்ளுவண்டிகளுக்குப் பயன்படுத்த அனுமதி
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Jul 2026 - 10:14 pm

2 mins read

சக்கரநாற்காலி பயன்படுத்துவோர் பேருந்துகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை, குழந்தைகள் தள்ளுவண்டிகளுக்குப் (prams) பயன்படுத்த அனுமதிக்கும் சோதனை முயற்சி குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

நிலப் போக்குவரத்து ஆணையம் ஆறு மாதத்திற்கு அந்தச் சோதனை முயற்சியை மேற்கொள்கிறது.

ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த முயற்சியின்கீழ், ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் சக்கர நாற்காலி அல்லது தனி நபர் நடமாட்டச் சாதனம் பயன்படுத்துவோரோ குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளைப் பயன்படுத்துவோரோ அந்த இடத்தைப் பயன்படுத்தலாம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உடற்குறையுள்ளோர்க்கான சங்கம் (DPA), குழந்தைத் தள்ளுவண்டிகளை மடக்கி வைக்க முடியும் என்றும் ஆனால் சக்கரநாற்காலிகளை அவ்வாறு செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. உடற்குறையுள்ளோர்க்குப் பேருந்துகளே மலிவான, முதன்மையான போக்குவரத்துச் சேவை என்றும் சங்கம், ஜூலை 26ஆம் தேதி, சமூக ஊடகத்தில் பதிவிட்டது.

சக்கர நாற்காலி பயன்படுத்தும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது அவருக்கான இடத்தை ஏற்கெனவே குழந்தைத் தள்ளுவண்டியுடன் ஏறிய பயணி பயன்படுத்தும் நிலையில், தள்ளுவண்டியை மடித்து, குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு அவர் சக்கர நாற்காலிக்கு வழிவிடும் சிரமம் இருப்பதைப் பாடகரும் பாடலாசிரியருமான 32 வயது ஸ்கை ஷென் சுட்டினார்.

சக்கர நாற்காலி பயன்படுத்தும் ஸ்கை ஷென், ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற விதி அமலுக்கு வந்தால், இடம் கிடைக்காத உடற்குறையுள்ளோர் அடுத்த பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இது குறித்துக் கருத்துரைத்த ஆணையம், தனியாகப் பல குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோரின் சிரமங்களைக் கருத்தில் கொண்டே இந்தச் சோதனை முயற்சி தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தது. சமூக சேவை அமைப்புகளுடன் கலந்துபேசி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அது கூறியது.

கிட்டத்தட்ட 10 பேருந்துச் சேவைகளில் இந்தச் சோதனை முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்துகளில் இரு தரப்பினருக்கும் போதுமான வசதிகளைச் செய்து தருவதே முறையான தீர்வாக இருக்கும் என்று உடற்குறையுள்ளோர்க்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பேருந்துசக்கர நாற்காலிகுழந்தைநிலப் போக்குவரத்து ஆணையம்உடற்குறையுள்ளோர்சங்கம்