அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்குவதுபற்றிச் சிங்கப்பூரர்கள் அதிக அக்கறைக் கொண்டிருந்தாலும், அதை வேலைவாய்ப்பாக மாற்றும் பாதை இன்னும் கடினமாகவே உள்ளதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.
சிங்கப்பூரில், உடற்குறையுள்ளோருக்கான வேலைவாய்ப்புக் கொள்கைகள் நடுத்தர அளவைவிடக் குறைவாகப் பயனளிப்பதாக உடற்குறையுள்ளோரும் மற்ற பொதுமக்களும் கூறியுள்ளனர். 2030க்குள் ஏற்படவுள்ள எதிர்கால மேம்பாடுகளும் “சிறியவற்றே” என அவர்கள் கூறுகின்றனர்.
உடற்குறையுள்ளவர்களே சக உடற்குறையுள்ளோரைப் பணியமர்த்துவதற்கு “சிறிதளவு” தயாராக உள்ளதாகக் கூறினர்.
‘எங்கேஜ்.மீ’ எனும் இந்த ஆய்வுக்கு ‘எஸ்எம்யு’ புள்ளியியல் முதன்மை விரிவுரையாளர் ரோசி சிங் தலைமையேற்று, சிங்கப்பூர்க் கண்பார்வையற்றோர் சங்கம் (SAVH), காது கேளாதோர் சங்கம் (SADeaf), எஸ்எம்யு புள்ளியியல் மாணவர்கள் 208 பேர் ஆகியோரின் ஆதரவுடன் நடத்தியுள்ளார்.
பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடையோர், இதர உடற்குறைகள் கொண்டுள்ளோர், உடற்குறையுள்ளோருடன் பணியாற்றுவோர் அல்லது தொண்டாற்றுவோர், பொதுமக்கள் என ஏறத்தாழ 7,265 பேர், ஜூலையில் தொடங்கிய இரு மாதக் கருத்தாய்வில் பங்கேற்றனர்.
“நல்லெண்ணம் இருக்கிறது. ஆனால் அணுகுமுறை இல்லாமல் நல்லெண்ணம் வேலைவாய்ப்பாக மாறாது. கதவைத் திறந்ததாகச் சொன்னாலும், அது பாதியாகவே திறந்திருப்பதை நாங்கள் புள்ளிவிவரங்களில் பார்க்கிறோம்,” என்றார் விரிவுரையாளர் ரோசி.
ஆய்வின் கண்டுபிடிப்புகளை மாணவர்கள் எஸ்எம்யுவில் நவம்பர் 17ஆம் தேதியன்று படைத்தனர்.
வேலை என்பது பொருளீட்டுவது பற்றியது மட்டுமல்ல; கெளரவமான வாழ்வை நடத்துவது பற்றியதும் என்றார் நிகழ்ச்சிக்கு வந்த ஜாலான் புசார் குழுத்தொகுதி (கம்போங் கிளாம்) ஆலோசகரும் மத்திய வட்டார மேயருமான டென்னிஸ் புவா.
தொடர்புடைய செய்திகள்
“வேலை செய்வது என்பது, பகுதிநேரமாக இருப்பினும், உடற்குறையுள்ளோருக்கு அர்த்தமுள்ளது. அதன்வழி அவர்களால் வெளியே சென்று, பொதுப் போக்குவரத்தை எடுக்க முடிகிறது; சக ஊழியர்களுடன் உண்ணமுடிகிறது. நிதிச் சுதந்திரம் முக்கியம் என்பதுபோல வேலையினால் கிடைக்கும் அடையாளம், பயன்களும் முக்கியம்,” என்றார் அவர்.
வேலையிட அணுகலே மிகப் பெரிய சவால்
அலுவலகங்களின் நேரடி, தொழில்நுட்ப, சமுதாய ரீதியான அணுகல் வசதிகள் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளதென, பாதிக்கும் மேற்பட்ட உடற்குறையுள்ளோர் கூறினர். தொழில்நுட்ப ரீதியான அணுகலே ஆகப் பின்தங்கியதாகக் கருதப்பட்டது.
“வேலைக்கு விண்ணப்பிக்க, தொடர்புகள் ஏற்படுத்த, வேலைவாய்ப்பு, கல்வி, சமூக வாழ்வில் பங்கேற்கும் ஆற்றல் இல்லாமல் உடற்குறையுள்ளோரால் வேலையிடத்தில் உண்மையாகப் பங்கேற்க முடியாது,” என்றார் விரிவுரையாளர் ரோசி.
விழிப்புணர்வு இடைவெளி
பத்தில் எட்டு உடற்குறையுள்ளோர், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சித் திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையெனக் கூறினர். மூவரில் இருவருக்கு உடற்குறையுள்ளோரைப் பணியமர்த்துவதற்கான மானியங்கள் பற்றித் தெரியவில்லை.
உடற்குறையுள்ளோர் தம் வேலைசார்ந்த மனநிறைவை 6.38/10 என மதிப்பிட்டாலும், நிதியளவில் தம்மை ஆதரிக்கும் திறனை 5.4/10 என்றே மதிப்பிட்டனர்.
பரிந்துரைகள்
தேசிய “உள்ளடக்கும் வழிமுறை” எனும் ஒருங்கிணைந்த மின்னிலக்கத் தளம்வழி வேலைவாய்ப்புகள், மானியங்கள், பயிற்சித் திட்டங்கள் அனைத்தையும் இணைக்க ஆய்வு பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும் உடற்குறையுள்ளோருக்கு வழிகாட்டும் குறுஞ்செய்தி, ‘வாட்ஸ்ஆப்’ குறிப்புகளை இது உள்ளடக்கும்.
உடற்குறையுள்ளோரைப் பணியமர்த்தும் வர்த்தகத் தலைவர்களுக்கு வரிச் சலுகைகள், தேசிய அங்கீகாரம் போன்றவை வழங்கப்படலாம் என்றும் அது பரிந்துரைக்கிறது.
சக்கர நாற்காலி பயன்படுத்தும் டோபி லிம், “வேலை தேடுவது கடினமாக உள்ளதால், உடற்குறையுள்ளோர் சுய தொழில்முனைவோர் ஆவதற்குக் கைகொடுக்கும் கூடுதல் மானியங்கள் வழங்கப்படலாம்,” என்றார்.
வேலையிடங்களில் முதலாளிகள் சில நாள்கள் எடுத்து உடற்குறையுள்ளோரைப் புதிய சூழலுக்குப் பொறுமையாகப் பழக்கப்படுத்தவேண்டும் எனப் பரிந்துரைத்தார் எஸ்எம்யு மாணவி ரெய்னா.

