ரிவர் வேலி வட்டாரத்தில் கட்டப்படும் புரமனாட் பீக் கொண்டோமினியத் திட்டத்தின், கற்காரை பாரத்தை இடம் மாற்றும் தளம் (கான்கிரீட் டிரான்ஸ்ஃபர் சிலாப்) தரநிலைகளைப் பூர்த்திசெய்யாதது சோதனைகளில் தெரியவந்துள்ளது.
அதனால் அத்தளம் அகற்றப்பட்டு மாற்றுத் தளம் பொருத்தப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
‘கான்கிரீட் டிரான்ஸ்ஃபர் சிலாப்’, ஒரு கட்டடத்தின் உயர் தளங்களிலிருந்து பாரத்தை கீழ்ப் பகுதியில் உள்ள கட்டமைப்பு அங்கங்கள் (columns) அல்லது சுவர்களுக்கு மாற்றும். மேல் தளங்களின் கட்டமைப்பு அங்கங்கள் அல்லது சுவர்கள் அமைந்திருக்கும் இடங்கள் கீழ்த்தளங்களில் இருப்பவற்றிலிருந்து மாறுபடும்போது கான்கிரீட் டிரான்ஸ்ஃபர் சிலாப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, வீடுகள் போடியம் வளாகம் அல்லது வாகன நிறுத்துமிடத்துக்கு மேல் அமைந்திருந்தால் அது பயன்படுத்தப்படும்.
மே மாதம் அளிக்கப்பட்ட தகவல்
ஆல்கிரீன் பிராப்பர்ட்டீஸ் சொத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தொ லியோ சாய் கட்டுமானப் பணிகள் குறித்து கடந்த மே மாதம் வாடிக்கையாளர்களுக்கு அளித்த தகவல்களில், தாங்களும் கட்டுமானப் பணிகளின் பெரும்பங்கை மேற்கொள்ளும் வோ ஹப் நிறுவனமும் இணைந்து நடத்திய சோதனைகளில், திட்டத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை கான்கிரீட் டிரான்ஸ்ஃபர் சிலாப் பூர்த்திசெய்யவில்லை என்பது தெரியவந்ததாகக் கூறினார். அதை மாற்றுவதே ஆகச் சிறந்த நடவடிக்கை என்பதை இருதரப்பும் முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
புரோமனாட் பீக் அளித்த தகவல்
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த புரோமனாட் பீக் திட்டத்துக்கான பேச்சாளர், கற்காரை போடும் பணிகள் நிறைவடைந்த பிறகு கான்கிரீட் டிரான்ஸ்ஃபர் சிலாப் தளத்தின் தரம் குறித்த கவலைகள், திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் தரநிலைச் சோதனைகளில் எழுந்ததாகக் கூறினார். அதற்கான காரணங்களை அவர் விவரிக்கவில்லை.
இதனால் திட்டத்தைக் கட்டிமுடிப்பதில் தாமதம் ஏற்படுமா என்று கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த அவர், இடிப்புப் பணிகளுக்கான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அது, கட்டுமானப் பணிகளுக்கான காலத்தைத் தீர்மானிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புரோமனாட் பீக் திட்டத்தை 2030ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த இலக்கை அடையத் தாங்கள் இன்னமும் முயற்சி செய்து வருவதாகவும் ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் அவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


