தீவு விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) நடந்த விபத்தில் கான்கிரீட் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமுற்ற 35 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தோ குவான் சாலையை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையில் இந்த விபத்து குறித்து அதிகாலை 5.20 மணியளவில் காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அந்த வாகனம் சறுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதாகக் காவல்துறை கூறியது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
‘எஸ்ஜி ரோடு விஜிலண்ட்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்தில், வெளிர் நிற கான்கிரீட் வாகனம், மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்மீது இடதுபுறமாகச் சாய்ந்து கிடந்தது.
வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. மேலும், அதன் பக்கவாட்டில் ‘Alliance Concrete’ என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

