முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் செங் பதிவிட்ட கருத்துகளுக்கு சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்விமான்கள், சமயக் கல்வி ஆசிரியர்கள் சங்கம் (பெர்காஸ்) ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) கண்டனம் தெரிவித்தது.
குறிப்பிட்ட சில ஆர்வலர்கள் காஸாவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சிங்கப்பூர் திரும்ப அனுமதிக்கக்கூடாது என்றும் திரு செங் தெரிவித்தது கவலை அளிப்பதாக பெர்காஸ் கூறியது.
சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத்தை நோக்கி திரு செங் இக்கருத்துகளைப் பதவிட்டதாக அது குறைகூறியது.
இவ்வளவு காலம் சிங்கப்பூர் கட்டிக்காத்த பல்லின, பல சமய ஒற்றுமையை இது சீர்குலைக்கக்கூடும் என்று அது கவலை தெரிவித்தது.
இதற்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) ஃபேஸ்புக் மூலம் பதிலளித்த திரு செங், தாம் குறிப்பிட்டவர்களில் முஸ்லிம் அல்லாதோரும் உள்ளனர் என்று தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஓர் இனம் அல்லது சமயத்தைத் தாக்கும் வகையில் தமது கருத்துகள் இடம்பெறவில்லை என்றார் அவர்.
‘மண்டே ஆஃப் பாலஸ்தீன் சோலிடேரிட்டி’ எனும் குழுவைச் சேர்ந்த ஆர்வலர்கள் பற்றி மார்ச் 13ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு செங் பதிவிட்டார்.
பாஸ்தீனம் குறித்து அக்கறை உடையோர் அதுகுறித்து தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்புமாறு அந்தக் குழு கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் மார்ச் 12ஆம் தேதியன்று தமது தொகுதிவாசிகளைச் சந்தித்தபோது அக்குழுவைச் சேர்ந்த சிலர் அந்நிகழ்வுக்கு இடையூறு விளைவித்தனர்.
இந்நிலையில், இந்த ஆர்வலர்களைப் பாலஸ்தீனத்துக்கு அனுப்பிவைக்க ஏற்படும் செலவுகளைத் தாம் ஏற்க முன்வருவதாக திரு செங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதியன்று பதிவிட்டார். ஆனால் அந்த ஆர்வலர்கள் மீண்டும் சிங்கப்பூர் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஆர்வலர் குழுவின் தலைவர்களுக்கு விமானத்தின் வர்த்தகப் பிரிவில் பாலஸ்தீனத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
குழுவின் 928 உறுப்பினர்களுக்கு காலணி வாங்கி கொடுத்து அவர்களை மெதுவாக நடந்து செல்லச் சொல்லலாம் என்று திரு செங் பதிவிட்டிருந்தார்.
பாலிஸ்தீன மக்கள் படும் துயருக்கு உலகெங்கும் மக்கள் பரிதாபப்படுவதாகவும் அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளதாக பெர்காஸ் கூறியது.
பாலஸ்தீனர்களின் நிலை குறித்து அக்கறை கொள்ளாமல், உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் திரு செங் கருத்துரைத்திருப்பதாக அது சாடியது.
இதற்கிடையே, இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்து தாம் முற்றிலும் வேறு கருத்துகளைக் கொண்டிருப்பதாக அமைச்சர் சண்முகம் ஏப்ரல் 2ஆம் தேதி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கருத்துரைக்கும்போது கவனம் தேவை என்றார் அவர்.
திரு செங்கின் கருத்துகளுடன் முரண்படுவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குத் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மசகோஸ் ஸுல்கிஃப்லி ஏப்ரல் 3ஆம் தேதியன்று தெரிவித்தார்.
அப்பாவி மக்கள் கடும் துயருக்கு ஆளாகியிருப்பது குறித்து பலர் அதிருப்தி, மனவேதனை வெளிப்படுத்தியிருப்பதை அவர் சுட்டினார்.