சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - லுஃப்தான்சா விமான நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அந்தக் கூட்டு நிறுவனத்திற்கு ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், அந்தக் கூட்டு நிறுவனத்தின் மூலம் மேலும் பல நாடுகளுக்குப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் நோக்கில் விரிவாக்கத் திட்டத்தை அந்நிறுவனங்கள் முன்வைத்திருந்தன.
அதன்மூலம் எஸ்ஐஏ நிறுவனத்தின் மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்கூட், லுஃப்தான்சா குழுமத்தின் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ஆஸ்திரியா ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் சேவைகளும் நீட்டிக்கப்படும்.
போர்ச்சுகல், ஐஸ்லாந்து, கிரீஸ், ஸ்பெயின், பிரிட்டன், வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சேவைகளை வழங்க அந்தக் கூட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது, சிங்கப்பூரின் சுற்றுலாத் துறை, அதுசார்ந்த மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் போட்டித்தன்மைமிக்க கட்டணங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகையால், நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தக் கூட்டு நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு ஜனவரி 28ஆம் தேதி அனுமதி வழங்கியதாக அது கூறியுள்ளது.
சிங்கப்பூர் - ஃபிராங்க்ஃபர்ட், சிங்கப்பூர் - ஸுரிக் வழித்தடங்களில் செல்லும் விமானங்களில் ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தபட்ச அளவு சிங்கப்பூர் பயணிகளை ஏற்றிச் செல்வது, இரு வழித்தடங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கை எண்ணிக்கையைப் பேணுவது உள்ளிட்டவை அந்த நிபந்தனைகளில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அக்கடப்பாடுகளுக்கு இணங்கிச் செயல்படுவதைக் கண்காணிக்க தன்னிச்சையான தணிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்றும் ஆணையத்திடம் ஆண்டறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்விரு விமானச் சேவை நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.