ஜூலை மாத அதிகரிப்புக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை, வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது.
ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதம் 7.6 விழுக்காடு குறைவாக, 6,730 கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாக எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co புதன்கிழமை வெளியிட்ட முன்னோட்டக் கணிப்புகள் காட்டுகின்றன.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதம் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 10.3 விழுக்காடு குறைவு.
கூட்டுரிமைச் சந்தையில், வழக்கமாக ஆகஸ்ட் மாதம் வாடகை வீடுகளின் எண்ணிக்கை குறையும் என்று 99.co நிறுவனத்தின் தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி லுக்மான் ஹக்கிம் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கூட்டுரிமை வீடுகளும் சந்தையில் சேர்ந்ததால் போட்டி அதிகரித்ததாக ஹட்டன்ஸ் ஆசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கூட்டுரிமை வீடுகளின் வாடகை முந்திய மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விழுக்காடு குறைந்தது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், கூட்டுரிமை வீடுகளின் வாடகை 17.3 விழுக்காடு அதிகமாக இருந்தது.
வீவக வீடுகளின் சந்தை ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதம் 0.1 விழுக்காடு அதிகரித்தது. ஈராண்டுகளில் இதுவே ஆகக் குறைவான அதிகரிப்பு.
தொடர்புடைய செய்திகள்
கூட்டுரிமைச் சந்தையைப்போல் வீவக வாடகைச் சந்தையும் மெதுவடைவதன் அல்லது நிலைப்படுவதன் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம் என்று சொத்து ஆய்வாளர்கள் கூறினர்.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் வீவக வீடுகளின் வாடகை 20.8 விழுக்காடு அதிகம்.
ஆகஸ்ட் மாதம் வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தைவிட 10.1 விழுக்காடு குறைந்து 2,997 வீடுகளாக இருந்தது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாத எண்ணிக்கை 16.9 விழுக்காடு அதிகம்.
வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளில் நான்கறை வீடுகள் 37.7 விழுக்காடும், மூவறை வீடுகள் 32.3 விழுக்காடும், ஐந்தறை வீடுகள் 24.1 விழுக்காடும், எக்சிகியூட்டிவ் வீடுகள் 5.9 விழுக்காடும் இருந்தன.
மூவறை, ஐந்தறை வீடுகளின் வாடகை முறையே 0.7 விழுக்காடும் 0.5 விழுக்காடும் அதிகரித்தன. நாலறை, எக்சிகியூட்டிவ் வீடுகளின் வாடகை முறையே 0.3 விழுக்காடும் 1.5 விழுக்காடும் குறைந்தன.

