கூட்டுரிமை வீடுகளுக்கான (கொண்டோமினியம்) வாடகை மே மாதத்தில் 0.6% சரிந்தது. முன்னதாக ஏப்ரலில் அது 1% அதிகரித்திருந்தது. இவ்வேளையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகை தொடர்ந்து 35வது மாதமாக உயர்ந்தது. இது வீவக வீடுகளுக்கான தேவை தொடர்ந்து இருப்பதைக் குறிக்கிறது.
மே மாதத்தில் 5,164 கொண்டோக்கள் வாடகைக்கு விடப்பட்டன. ஏப்ரலில் அந்த எண்ணிக்கை 5,623ஆக இருந்தது. ஒப்புநோக்க, மே மாதம் வாடகைக்கு விடப்பட்ட கொண்டோக்களின் எண்ணிக்கையுடன் 8.2% குறைவு.
மே மாதம் வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 10.2% சரிந்து 2,857 ஆனது. ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,183 ஆக இருந்தது.
வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையே வாடகை தொடர்பான எதிர்பார்ப்புகள் ஒத்துப் போகாதது, கொண்டோ வாடகைச் சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்ப்புகள் ஒத்துப்போகாத காரணத்தால் ஒப்பந்தங்களை உறுதிசெய்யும் காலகட்டம் நீண்டிருக்கலாம் என்றும் இதனால் வாடகைதாரர்கள் குறைந்த வாடகைக்கு பொது வீடமைப்பு வீடுகளை நாடியிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
கொண்டோ வாடகைச் சரிவை, தனியார் வீடுகளின் வாடகை உயர்வு உச்சம் அடைந்துவிட்டது என்பதற்கும் வாடகைத் தொகை படிப்படியாக நிலையாகி வருகிறது என்பதற்குமான அறிகுறியாகக் கருதலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.


