பாக்கித் தொகையை வசூலிக்க கட்டாய விற்பனையில் கொண்டோமினிய வீடுகள்

பாக்கித் தொகையை வசூலிக்க கட்டாய விற்பனையில் கொண்டோமினிய வீடுகள்

2 mins read
d81bfd78-d474-49e2-b301-80af64f5c11b
கடந்த ஆண்டு கட்டாய விற்பனையின்கீழ் விற்கப்பட்ட வீடு அமைந்துள்ள ‘பார்க்‌ஷோர்’ கொண்டாமினியக் குடியிருப்புக் கட்டடம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆயிரக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்டவற்றை பாக்கி வைத்ததால் இரு வெளிநாட்டவருக்குச் சொந்தமான கொண்டோமினிய நாலறை வீடு கட்டாய விற்பனை வாயிலாக விற்கப்பட்டது.

பாக்கித் தொகைகளை மீட்பதற்காக, தஞ்சோங் ரு வட்டாரத்தில் உள்ள பார்க்‌ஷோர் என்னும் அந்த கொண்டாமினிய வீட்டை கொண்டோமினியத்தின் எம்சிஎஸ்டி என்னும் அடுக்குமாடி வீடுகளுக்கான நிர்வாகக் கழகம் 2025 செப்டம்பரில் விற்பனைக்கு விட்டது.

அது விற்கப்படுவதற்கு முன்னதாக, 2024 டிசம்பர் 23ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட விற்பனை அறிவிப்பில் நிர்வாகக் கழகத்திற்கு வீட்டின் உரிமையாளர்கள் $61,000 பாக்கி வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீட்டின் உரிமையாளர்கள் இந்தோனீசியர்கள் என்பது அந்தச் சொத்து விவரங்களைத் தேடியபோது தெரியவந்தது.

வீட்டின் பரப்பளவு 2,325 சதுர அடி என்பதையும் அது $4 மில்லியனுக்கு ஏலம் விடப்பட்டது என்பதையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்தது. ஏல விற்பனையில் கிடைத்த தொகை, சொத்தின் தொடக்க விலையான $4.7 மில்லியனைக் காட்டிலும் குறைவு.

கட்டடப் பராமரிப்பு மற்றும் அடுக்குமாடி நிர்வாகச் சட்டத்தின்கீழ், வீட்டு உரிமையாளர்களின் பாக்கித் தொகையை வசூலிக்க எந்தவொரு வீட்டையும் கட்டாயத்தின்பேரில் விற்கும் அதிகாரத்தை எம்சிஎஸ்டி (MCST) பெற்றுள்ளது.

அத்தகைய கட்டாய விற்பனை அரிதான ஒன்று. பராமரிப்புக் கட்டணம் மற்றும் வருங்காலச் சேதத்திற்கான சேமிப்பு நிதி ஆகியவற்றின் பாக்கித்தொகை அதிகரிக்கும்போது எம்சிஎஸ்டி எடுக்கும் கடுமையான நடவடிக்கையே அந்தக் கட்டாய விற்பனை.

அதுபோன்ற கட்டாய விற்பனை குறித்த அறிவிப்பு சராசரியாக மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒன்றாவது இடம்பெற்று வருகிறது என்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சோதித்து அறிந்தது.

வீட்டு உரிமையாளர்கள் $9,450க்கும் $55,798க்கும் இடைப்பட்ட தொகையைப் பாக்கி வைத்திருந்த காரணத்திற்காக அந்த விற்பனை அறிவிப்பு செய்யப்பட்டது.

அவற்றில் ஒன்று 2026 பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜூ சியாட் வட்டாரத்தில் உள்ள ‘பார்க் கோர்ட்’ கொண்டோமினிய வீட்டின் உரிமையாளர் $55,798 பாக்கி வைத்திருந்ததற்காக அந்த கட்டாய விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்