தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியிருப்புகளில் களைகட்டிய தேசிய தினக் கொண்டாட்டங்கள்

4 mins read
தஞ்சோங் ரூ பகுதியிலுள்ள ‘த வாட்டர்சைடு’ தனியார் கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்கள் கடந்த ஜூலை மாதம் முதலே வண்ண அலங்காரங்களுடன் தேசிய தினக் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.
52d67847-1d18-424d-9b85-a15f6a643c19
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீயுடன் குடியிருப்பாளர்கள். - படம்: சுந்தர நடராஜ்

பல மாதங்களாகத் தொடர்ந்த ஏற்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு ஜூலை 27 ஆம் தேதி அக்கொண்டாட்டங்கள் தொடங்கின.

தொகுப்பு வீடுகளின் பகிரப்பட்ட பகுதிகளை நிர்வகிக்கும் மவுண்ட்பேட்டன் மேலாண்மைக் குழு சார்பில் (Management Corporation Strata Title) ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய தின அலங்காரப் போட்டிக்காக இவ்வலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

காத்தோங் சமூக மன்ற நிர்வாகக் குழு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தொகுப்பு வீடுகளின் தோட்டங்களை அழகுபடுத்துவதையும், குடியிருப்பாளர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்க மவுண்ட்பேட்டன் பகுதியிலுள்ள அனைத்து மேலாண்மைக் குழுக்களும் அழைக்கப்பட்டன.

கடந்த 20 ஆண்டுகளாக அங்கு வசித்துவரும் மருத்துவமனைச் சேர்க்கை நிபுணரான திருவாட்டி சலோனி, 58, அலங்காரக் குழுத் துணைத் தலைவராகச் செயல்பட்டு ‘த வாட்டர்சைடு’ நிர்வாகக் குழு, நிபுணர்களுடன் இணைந்து அலங்காரங்களுக்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டார்.

தமது குடும்பத்தினருடன் திவ்யானி.
தமது குடும்பத்தினருடன் திவ்யானி. - படம்: சுந்தர நடராஜ் 

கடந்த நான்கு வாரங்களாகப் புறச்சூழலின் தாக்கங்களைத் தாக்குப்பிடித்து வலுவாக நிற்கக்கூடிய அலங்காரங்களைத் திட்டமிட்டு நிறுவியதாகக் கூறிய அவர், “நான் அடிப்படையில் முக்கியப் பணியை மேற்கொண்டாலும், தொண்டூழியர்களின் ஆதரவு இல்லாமல் இவை முழுமை பெற்றிருக்க மாட்டா,” என்றார்.

“இப்பணிகளில் சிங்கப்பூரர்கள் மட்டுமன்றி நிரந்தரவாசிகள், வெளிநாட்டிலிருந்து வந்துள்ள வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் என அனைவரும் இணைந்து பங்களித்திருப்பது கூடுதல் சிறப்பு,” என்றார் அவர்.

இவ்வகைக் குடியிருப்புகளில் பல இனச் சமூகத்தினர் வசித்தாலும், விழா ஏற்பாட்டுப் பணிகளில் இந்தியச் சமூகத்தினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கூட்டுரிமை வீடுகளின் பல நிகழ்ச்சிகளில் இந்தியச் சமூகத்தினர் அதிகம் பங்கேற்பதற்கு இது காரணமாக இருக்கலாம் என்றும் சலோனி குறிப்பிட்டார்.

அக்குடியிருப்பின் காவலர் அறைக்குப் பின்புறமுள்ள திறந்தவெளியில் ‘மெர்லயன்’ போன்ற அலங்காரங்கள், கடந்த அறுபதாண்டுகளில் சிங்கப்பூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை விளக்கும் அலங்காரங்களைக் கொண்ட அளவிலான ஆறு பலகைகள் இடம்பெற்றுள்ளன.

மின்னும் 360 சிறு மின்விளக்குகளுடன் ‘அக்ரெலிக்’ தாளில் பெரிய தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கொடி இருக்கும் இடத்திற்கு இட்டுச்செல்லும் மாடிப்படிகளில் வரிசையாகக் கோத்துத் தொங்கவிடப்பட்டுள்ள தேசியக் கொடி அலங்காரங்களுடன் களைகட்டியுள்ளது அக்குடியிருப்பு.

மேலும், சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளையொட்டி குடியிருப்பாளர்கள் கைப்பட எழுதிய இதயபூர்வமான வாழ்த்துச் சொற்களுடன் ஒரு பலகை நிறுவப்பட்டுள்ளது.

படிகளின் இருபுறமும் வெள்ளி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட பழங்கால மிதிவண்டிகள், அதன் முன்புறக் கூடைகளில் மறுசுழற்சி செய்யப்பட்ட பழக் கூடைகளாலான சிவப்பு, வெள்ளை மலர்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜூலை 27ஆம் தேதி, குடியிருப்பாளர்கள் ஏறத்தாழ 200 பேர், சிவப்பு, வெள்ளை உடையணிந்து திரண்டிருந்தனர். மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ ஸி கீயும் போட்டியின் நடுவர்களும் அலங்காரங்களைப் பார்வையிட்டனர்.

விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற குடியிருப்பாளர்கள்.
விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற குடியிருப்பாளர்கள். - படம்: சுந்தர நடராஜ் 

“நாட்டையும், தேசிய தினத்தையும் கொண்டாட அனைவரும் ஒன்றிணைந்துள்ளதைப் பார்ப்பது மனநிறைவளிக்கிறது. சிந்தனைமிக்க, அற்புதமான கலை நிறுவல்களைக் காட்சிப்படுத்த உழைத்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்,” என்றார் திருவாட்டி கோ.

‘த வாட்டர்சைடு’ குடியிருப்பு கடந்த 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நான்காண்டுகளாக இப்போட்டியில் வாகை சூடி வருகிறது.

இந்த ஆண்டு 19 குடியிருப்புகளுடன் போட்டியிட்டு மீண்டும் தங்கம் வென்றதாகக் கூறினார் திருவாட்டி சலோனி.

குடியிருப்பாளர்கள் தொடர் வெற்றியினால் பெருமைகொண்டாலும், இந்த நிகழ்ச்சி ஒவ்வோராண்டும் அச்சமூகத்தை ஒன்றிணைக்கும் பாரம்பரியமாகவும் பரிணமித்துள்ளது.

தமது நண்பர்கள் பலரும் பங்கேற்பதன் காரணமாகத் தாமும் தேசிய தின அலங்காரக் குழுவில் ஈடுபட ஆர்வம் கொண்டதாகக் கூறினார் திருவாட்டி அனுபா பார்கவா, 52.

கடந்த 18 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் அவரும் அவரது கணவரும் தங்கள் ‘மால்டி பூ’ வகை நாய்க்குட்டியுடன் பங்கேற்றது சக குடியிருப்பாளர்களுக்கும் உற்சாகமளித்தது.

தலைமுறைகள் தாண்டிய தொடர்புகளையும் பிணைப்பையும் வளர்க்கும் நோக்கில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பங்கேற்கும் ‘கார்னிவல்’ அரங்குகள், முக ஓவியம் எனப் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடியிருப்பாளரும் 15 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலைஞருமான திருவாட்டி குமுதா குரோவ்விடி (Krovvidi) கைவினை அட்டை தயாரிப்பதற்கான பொருள்களை வழங்கினார்.

மனிதவளத் துறை ஊழியரான திவ்யானி சரண், 41 ஆறு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் கடந்த பத்தாண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். அவரது மகன் கபீர் சரண், 13, ஓய்வுபெற்ற பேராசிரியரான அவரது தாயார் கும்கும் சரண், 64 இருவரும் அலங்காரப் பூக்களை வடிவமைக்கும் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

குடும்பத்துடன் நேரம் செலவிடுவதுடன், இதுபோன்ற நிகழ்ச்சிகள் தம்மைப் போன்ற வெளிநாட்டினரை உள்ளூர்ச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கவும் உதவுகின்றன என்றார் திவ்யானி.

சிங்கப்பூரைத் தாங்கள் அதிகம் நேசிப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே வசிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்